ஜெயலலிதாவின் அமைச்சரவையை சேர்ந்த சீனியர் அமைச்சர்களே அடக்கி வாசித்து ஆயுளை ஓட்டிய காலத்தில், அதார் உதாராக அரசியல் செய்து அதகளம் செய்தவர் செந்தில் பாலாஜி. சின்னம்மா சர்க்கிளில் மிகப்பெரிய ஆதரவு லாபியை வைத்திருந்த மனுஷன் திடீரென பதவி பறிக்கப்பட்டு டம்மியாக்கப்பட்டார். இனி அவருக்கு அரசியலில் வாழ்க்கையே இல்லை! என்று சக அமைச்சர்கள் கொக்கரித்த நிலையில் மீண்டும் எம்.எல்.ஏ. சீட் வாங்கினார், ஆனால் தேர்தல் ரத்தானது. சில மாதங்கள் கழித்து நடந்த அரவக்குறிச்சி தொகுதி தேர்தலில் வெல்லவும் செய்தார். 

ஜெயலலிதா மரணத்துக்குப் பின் சசிகலா மீதான விசுவாசத்துக்காக தினகரனின் படைத்தளபதியாய் நின்று கொண்டிருக்கிறார். ஆளும் அணியிலிருக்கும் கரூரை சேர்ந்த அ.தி.மு.க. வி.ஐ.பி.க்களான அமைச்சர் விஜயபாஸ்கர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இருவருக்கும் அரசியலில் குடைச்சல் மேல் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் செந்தில் பாலாஜி. 

அப்பேர்ப்பட்ட மனிதர் இப்போது திடீரென அரவக்குறிச்சியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டிருக்கிறாராம். ஏன்? என்றால் ‘அரவக்குறிச்சி தொகுதியின் வளர்ச்சிக்காக செந்தில்பாலாஜி கோரிக்கை வைத்த திட்டங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. அதை கண்டித்தே இந்த உண்ணாவிரத பிளான்.’ என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். 

ஆனால் கரூரை சேர்ந்த அ.தி.மு.க. சீனியர்களோ “அண்ணன் உ.வி. இருக்குறது அரவக்குறிச்சி மக்களுக்காக இல்லை. இதுல ஒரு கணக்கு இருக்குது. அதாவது பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுல இவரும் ஒருத்தர். ஒருவேளை அந்த வழக்குல அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துவிட்டால் உடனடியாக இடைத்தேர்தலை நடத்த ஆயத்தமாகிவிடுவார்கள். 

அப்போது தினகரன் அணி சார்பாக மீண்டும் செந்தில் பாலாஜியே இங்கே போட்டியிடுவார். அப்போது மக்கள் தனக்கு ஓட்டுப்போட வேண்டுமல்லவா? அதற்காகத்தான் இந்த பிளானை போட்டிருக்கிறார் செ.பா. 

சட்டமன்றத்தில் நான் உங்களுக்காக பேசினேன், ஆனால் எடப்பாடியார் அரசு உங்களுக்கு நன்மை செய்ய தயாராக இல்லை. நான் என்ன செய்யட்டும்? இப்படி போராடுவதை தவிர வேறு வழியில்லை! என்று உண்ணாவிரதத்தில் இவர் புலம்பிக் கொட்டினால் மக்களுக்கு இவர் மீது அனுதாபம் வரும், நாளை தேர்தலுக்கு அது கை கொடுக்கும். அதற்கே இந்த ஏற்பாடு! இது பக்கா டிராமா!” என்கிறார்கள். 

ஆனால் செந்தில்பாலாஜி தரப்போ இந்த விமர்சனத்தை மறுத்து ‘எங்களை தேவையில்லாமல் தகுதிநீக்கம் செய்து, எங்கள் தொகுதிகளின் மக்களுக்கு எம்.எல்.ஏ.வே இல்லாமல் பண்ணிவிட்டார்கள். மக்கள் நல பணிகளில் அரசுக்கு கவலை இல்லாவிட்டாலும் எங்களுக்கு இருக்கிறது. அதற்காகவே இந்த உண்ணாவிரதம்.’ என்கிறது. 
என்னா அரசியல்டா!