விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பும் வரை செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டுள்ளார்.

வேலை வாங்கித்தருவதாக பல லட்சம் மோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில் அறவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜியின் சென்னையில் உள்ள வீடு, கரூரில் உள்ள வீடு அலுவலகம் ஆகியவற்றில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெவ்வேறு குழுக்களாக சென்று கடந்த மாதம் 31ம் தேதி  சோதனை நடத்தினர்.

கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர் டி.டி.வி. தினகரனின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். பின்னர் தினகரன் கட்சியில் இருந்து விலகி கடந்த 2018-ம் ஆண்டு தி.மு.க.வில் சேர்ந்தார். அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். தற்போது கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக இருக்கும் செந்தில்பாலாஜி தி.மு.க.வில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் 2017-ம் ஆண்டு சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘போக்குவரத்துத் துறையில் குமாஸ்தா வேலை வாங்கி தருவதாக கூறி தான் உள்ளிட்ட 16 பேரிடம் செந்தில்பாலாஜி ரூ. 1 கோடி வரையில் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அதில் தெரிவித்து இருந்தார்.

அதன் பேரில் கூடுதல் மத்தியக்குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி ஒழிப்புப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக கோர்ட்டில் முன்ஜாமின் பெற்றார் செந்தில்பாலாஜி. இவ்வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த மணிமாறன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணைக்கமிஷனர் சரவணகுமார் தலைமையில் கடந்த 31ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். 

இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பும் வரை செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டுள்ளார்.