மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சராக பொறுபேற்கும்பொழுது இந்த ஆட்சியில் இருக்கின்ற கூவத்தூர் பழனிசாமி உள்பட பலபேர் திருச்சி மத்திய சிறை, சேலம் மத்திய சிறை, சென்னை புழல் சிறை உள்ளிட்ட இடங்களில் கம்பியை எண்ணிக்கொண்டிருப்பார்கள் என ஆவேசமாக பேசினார் செந்தில் பாலாஜி. 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலயில் அண்மையில் செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் விழா இன்று மாலை 5 மணிக்கு கரூர் திருமாநிலையூரில் இருந்து ராயனூர் செல்லும் வழியில் உள்ள கலைவாணி நகரில் நடைபெற்றது.
 
அப்போது பேசிய செந்தில் பாலாஜி, ’’ஏதோ கூவத்தூரில் குறுக்கு வழியில் படிபோட்டதால் முதல் அமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துகிட்டு, இந்த நாட்டு மக்களுக்கு துரோகத்தைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி, இந்த ஊரில் உள்ள தம்பிதுரை கைத்தடி உள்பட எல்லாருமே தங்கள் மீது வழக்கு வரக்கூடாது, வழக்கில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்க்காக தமிழக மக்களின் உரிமைகளை, நலனை, மத்திய அரசிடம் மோடி அரசிடம் அடகு வைத்துவிட்டு தமிழக மக்களுக்கு எதிரான ஆட்சியை செய்துகொண்டிருக்கிறார்கள். 

இந்த தான்தோனிமலையில் இருந்து கல்யாணவெங்கட்ரமண ஸ்வாமிகள் பாதங்களில் இருந்து சொல்கிறேன். வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும் 234 தொகுதிகளிலும் வென்று ஸ்டாலின் முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்வார். 

ஸ்டாலின் முதல் அமைச்சராக பொறுபேற்கும்பொழுது இந்த ஆட்சியில் இருக்கின்ற கூவத்தூர் பழனிசாமி உள்பட பலபேர் திருச்சி மத்திய சிறை, சேலம் மத்திய சிறை, சென்னை புழல் சிறை உள்ளிட்ட இடங்களில் கம்பியை எண்ணிக்கொண்டிருப்பார்கள். இந்த அரசு தமிழர் நலனுக்கு எதிரான அரசு. இந்த அரசை வீழ்த்த வேண்டுமென்றால், தமிழக உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்றால் அது ஸ்டாலினால்தான் முடியும்'' என அவர் தெரிவித்தார்.