திமுகவில் இணைந்து புதுத்தெம்போடு மேற்கு மாவட்டங்களில் உடன்பிறப்புகளுடன் வலம் வரும் செந்தில் பாலாஜிக்கு குபீர் குடைச்சலை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். 

அமமுகவில் டி.டி.வி.தினகரனுக்கு பக்கபலமாய் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தீடீரென திமுகவுக்கு முகாம் மாறி அரசியல் களத்தையே அதிர வைத்தார். கட்சிப்பணிகளில் சுழன்றடிக்கும் செந்தில் பாலாஜி சென்றதால் திமுக மேற்கு மாவட்டங்களில் பலம் பெறும் என எதிர்பார்த்தே மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜிக்கு சிவப்புக் கம்பளம் விரித்தார். கடந்த மாதம் பிரம்மாண்டமாக இணைப்பு விழா நடைபெற்றது. அப்போது 30 ஆயிரம் பேரை திமுகவில் இணைத்து கெத்து காட்டினார் செந்தில் பாலாஜி.

 

இதனால், அமமுக, அதிமுக வட்டாரங்கள் கலகலத்தன. செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்த பின், அரவக்குறிச்சி தொகுதி திமுகவுக்கு செம ஸ்ட்ராங்காகி வருகிறது. செந்தில்பாலாஜியை இந்தத் தொகுதியில் திமுக நிறுத்துவது உறுதியாகி இருக்கிறது. இப்போதே அவரது வெற்றி உறுதி என்கிறார்கள். இந்த நிலையில், தான் நம்பி இருந்த ஒருவர் தன் முதுகில் குத்திவிட்டுச் சென்றதை தாங்கிக் கொள்ள முடியாத டி.டி.வி.தினகரன் செந்தில் பாலாஜியின் மூவ்களை இஞ்ச் இஞ்சாக கவனித்து வருகிறாரம்.

 

செந்தில்பாலாஜியின் செல்வாக்கை கரூரில் சரித்துக் காட்டியே ஆகவேண்டும் என க்லணக்குப் போட்டு அவரது செல்வாக்கை சரிக்க ‘நொய்யல் விவசாயிகள் சங்கம்’ அமைப்பைச் சேர்ந்தவர்களை அமமுக வளைக்கத் திட்டமிட்டு இருக்கிறது. நொய்யல் சாயக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட 5000 விவசாயக் குடும்பங்கள் இந்தச் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தேர்தலில் இவர்கள் எடுக்கும் முடிவு திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் அமமுக தரப்பிலுமிருந்து சங்கத்து ஆட்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்களாம். இன்னொரு புறம் செந்தில்பாலாஜிக்கு எதிராக இதே சங்கத்தினருடன் ஆளும் அதிமுக தரப்பும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறார்கள்.