பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜூலை 15-ம் தேதி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது.
பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜூலை 15-ம் தேதி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜி, 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு, சகாயராஜ் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் ஏற்கெனவே சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.ஆலிசியா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடப்பதால் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அமைச்சர் செந்தில்பாலாஜி ஜூலை 15ஆம் தேதி நேரில் ஆஜராக மீண்டும் சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
