கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில்பாலாஜி பதவி வகித்தார். பவர் ஃபுல் அமைச்சராக இருந்த அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்தார். மேலும், சின்னம்மா என்றழைக்கப்படும் வி.கே.சசிகலாவின் ஆதரவும் பெற்றவராக உள்ளார். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் செல்லப்பிள்ளையாக கருதப்படுபவர்.
இவருக்கு பொதுமக்களிடம் அதிக செல்வாக்கு மற்றும் நற்பெயர் பெற்றதால், கட்சி மேலிடம் அவர் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனாலும் செந்தில்பாலாஜி, மனம் தளாராமலும், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாகவே இருந்து வருகிறார். மிகவும் தவித்து வந்தார்.

தமிழகத்துக்கான 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக மனு செய்து, பல்வேறு கட்டத்தில் போராடி, தேர்தலில் போட்டியிட முயற்சித்தார்.
அவருக்கு, அதிமுக மேலிடம் போட்டியிட சீட் கொடுத்தது. ஆனால், அந்த தொகுதியில் பணம் பட்டுவாடா நடந்துள்ளதாக கூறி, தேர்தல் ஆணையம், தேர்தலை ஒத்தி வைத்தது. இதனால் செந்தில்பாலாஜி, அந்த தொகுதியில் தேர்தல் நடக்குமோ, நடக்காதோ என்ற கலக்கத்தில் இருந்து வந்தார்.
இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் நடந்தது. அதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியை தோற்கடித்து அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எம்எல்ஏவாக பதவி பிரமாணமும் நடந்து முடிந்தது.
கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகள் உள்ளன. இதில், தனது தொகுதியில் உள்ளூர் நேர் எதிரியான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் உள்ளார். இதனால், சசிகலாவின் அமோக ஆதரவு பெற்றுள்ள செந்தில்பாலாஜிக்கு, அமைச்சர் பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 12ம் நாள் அஞ்சலி செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
அப்போது, ஊர்வலத்தின் போதும், வணக்கம் செலுத்தும்போதும் அதில் கலந்து கொண்ட செந்தில்பாலாஜி கதறி கதறி அழுது கொண்டே இருந்துள்ளார். மறைந்த ஜெயலலிதா மீது செந்தில்பாலாஜி, வைத்துள்ள பாசம் அவரை கதறி துடிக்க செய்துள்ளது என அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.

இதை தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க.வின் சின்னம்மாவான சசிகலாவை இன்று செந்தில்பாலாஜி சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக பொதுச் செயலாளராக, சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டு கொண்டுள்ளார். அங்கு செந்தில்பாலாஜியுடன் சென்ற அமைச்சரைவிட, அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
எனவே, விரைவில் செந்தில்பாலாஜிக்கு இழந்த அமைச்சர் பதவி, இந்த ஆட்சில் மீண்டும் கிடைக்கும் என முழு நம்பிக்கையுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
