அரசுக்கு எதிராக மீண்டும் உண்ணாவிரதம் இருக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு அளித்துள்ளார். 

கரூர் மாவட்டம் வாங்கல் குச்சிபாளையத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை அமைப்பதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருபவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி..

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது ஆட்சிக்குள்ளும் கட்சிக்குள்ளும் அதிகார சக்தியாக அவதாரம் எடுத்தவர் செந்தில்பாலாஜி. மலிவு விலை குடிநீர் உள்ளிட்டபல திட்டங்களால் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்ற செந்தில் பாலாஜியால் அந்த இமேஜை நீண்ட காலத்திற்கு தக்கவைக்க முடியவில்லை. 

ஒரே இரவில் அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சிப் பொறுப்பில் இருந்தும் தூக்கியடிக்கப்பட்டார். பிறகு மீண்டும் கட்சிக்குள் சேர்க்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை அழகு பார்க்கப்பட்ட ஜெந்தில்பாலாஜி, ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடி அரசால் ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளார். இவரது சரிவுக்கு உள்ளூர் அரசியல் எதிரியான மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், எம்.ஆர். விஜயபாஸ்கருமே முக்கிய காரணம் என்ற டாக்கும் உண்டு. 

அரவக்குறிச்சி மற்றும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்காக கோடிகளை கொட்டி செலவு செய்தாலும், புறக்கணிக்கப்பே பலனாக வந்ததால் அதிர்ச்சியும் ஆவேசமும் கொண்ட செந்தில்பாலாஜி, குச்சிபாளையத்தில் மருத்துவக் கல்லூரியை அமைக்கக்கோரி அண்மையில் உண்ணாவிரதத்தில் குதித்தார். இடையில் ஏற்பட்ட களோபரத்தால் செந்தில்பாலாஜியின் உண்ணாவிரதப் போராட்டம் பெரிதாக எடுபடவில்லை. இருந்தாலும் மனந்தளராத செந்தில்பாலாஜி, சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும், அமைச்சர் பதவியை அளிக்காவிட்டால் ஆட்சியை கலைக்கவும் தயார் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே அரசுக்கு எதிராக மே 5 ஆம் மீண்டும் உண்ணாவிரதப் இருக்க அனுமதிகோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அவர் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக கரூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் அவர் மனு அளித்துள்ளார்.