தாய்க்குத் துரோகம் செய்யும் வகையில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் உள்ளதாக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மதுரை மேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்ட செந்தில் பாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அதிமுக  பொதுச் செயலாளர் சசிகலா தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தப் பொதுக்கூட்டம் மாநாடு போன்று நடக்க வேண்டும் என கூறியுள்ளதாகவும், அதனால் அதிமுகவினர், அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் 2 லட்சம் தொண்டர்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது எங்களுக்கு புது உற்சாகத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்று செந்தில் பாலாஜி கூறினார்.

கூவத்தூரில் சசிகலா மற்றும் தினகரன் கேட்டுக் கொண்டதின் பேரில் எடப்பாடி பழனிச்சாமியை 122 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்த நிலையில், தற்போது அவரின் செயல்பாடு தாய்க்குச் செய்யும் துரோகம் போன்று உள்ளது என தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கவிழ்க்க வேண்டும் என்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் தற்போது கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? எனவும் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.