நீட் தேர்வு உள்ளிட்ட எந்த தேர்வையும் சந்திக்கும் வகையில் தமிழக மாணவர்களை தயார் செய்வோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓர் ஆண்டு மட்டும் விலக்களிக்க  வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி விலக்கு மறுக்கப்பட்டது.

இந்நிலையில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவியின் தற்கொலை பெரும் வேதனை தரும் ஒன்றாக இருக்கிறது என கூறினார்.

எங்களைப் போன்றவர்கள் எண்ணிப்பார்க்க முடியாத நிகழ்வு அது. அவரது குடும்பத்துக்கு எங்கள் துறை சார்பாக ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்காலத்தில் இதுபோன்று இடர்பாடுகள் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலும், மாணவர்களின் மனதில் அச்சம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் விரைந்து பணியாற்றி வருகிறோம் என  கூறினார்.

எதிர்காலத்தில் நீட் போன்று எந்த தேர்வு வந்தாலும் அதை சந்திப்பதற்கு மாணவர்களை தயார்படுத்த இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் நீட்  தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் தந்து கொண்டிருப்பதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.