மத்திய பாடத் திட்டத்தின் அடிப்படையில் 12 ஆம் வகுப்பிற்கு வெளியிடப்பட்ட ஆங்கில புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மொழி கி.மு. 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும், சமஸ்கிருத மொழி கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான மொழியாகவும் அந்த ஆங்கில பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த செயலுக்கு கல்வியாளர்கள், தமிழ் அறிஞர்கள், எதிர்க்கட்சிகள் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் பலத்த கண்டனங்கள் எழுந்தன.  
 
குறிப்பாக இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத அரசா ? என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கண்டம் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழ் மொழியின் தோற்றம் குறித்த சர்ச்சைக்குரிய பாடப்பகுதி நீக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் மொழி கிமு 300 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது என்று 12ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது உடனடியாக திருத்தப்படும். தவறாக குறிப்பிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். உலகிலேயே மூத்த மொழி தமிழ் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை என தெரிவித்தார்.