ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின்  மூன்றாவது வாரங்களில் துவங்கும் அந்த அலசல் இப்போதும் துவங்கிவிட்டது. அதாவது ‘இன்னும் இரண்டு வாரங்களில் பள்ளிகள் துவங்க இருக்கின்றன. அரசு பள்ளிகளில் தரம் எந்தளவுக்குஇருக்கிறது? அல்லது வழக்கம்போல் தனியாரை நோக்கித்தான் மக்கள் ஓடுவார்களா?’ என்பதுதான் அது. 

இதற்கு பதில் சொல்லியிருக்கும் தமிழக பள்ளிக் கல்வைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் “இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில்தான் மாநில கல்வி பாடத்திட்டம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. நீட், ஐ.ஐ.டி. போன்ற அகில இந்திய  நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளும் வண்ணம்தான் நமது பாடத்திட்டம் உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள எந்த தேர்வாக இருந்தாலும்,  அதற்கு 80% பதில்கள் நமது தமிழக பள்ளிக்கல்வித்துறை உருவாக்கியுள்ள பாடத்திட்டத்திலேயே உள்ளன. 

மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் மிக அதிகம் உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் என்று ஆரம்பித்து வெகு சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.” என்று ஆரம்பித்து தமிழக அரசு பள்ளிகளையும், தன் கையிலிருக்கும் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளையும் கொண்டாடி  இருக்கிறார். 

இந்நிலையில், இதற்கு எதிர் பதில் தரும் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் “ஜெயலலிதாவின் மரணத்தின் பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையனின் போக்கு ஏதோ தனி மாநிலம், தனி முதல்வர் எனும் ரேஞ்சில்தான் உள்ளது. ஏதோ ஒரு அரசியல் காரணத்தினால் முதல்வர், துணை முதல்வர் போன்றோர் இவரது துறையின் நடவடிக்கைகளில் தலையிடுவதே இல்லை. 

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை தரமுயர்த்திவிட்டோம்! என்று மேடைக்கு மேடை, மைக்குக்கு மைக் பேசுகிறார் அமைச்சர் செங்கோட்டையன். ஆனால் முறையான டாய்லெட் வசதி கூட இல்லாமல்தான் கிடக்கின்றன. 

சத்துணவில் ஆரம்பித்து சீருடை வரை எல்லாவற்றிலும் பிரச்னைகள்தான், சிக்கல்கள்தான். அமைச்சர் சொல்வது போல் ஸ்மார்ட் வகுப்பறை, லேப் எல்லாமே சில அரசு பள்ளியின் ஆசிரியர்களோ, தலைமை ஆசிரியர்களோ தங்கள் சொந்த முயற்சியில் யாரையாவது ஸ்பான்சர் பிடித்து கொண்டு வருவதால் நடப்பதுதானே தவிர அரசு தரப்பிலெல்லாம் ஒன்றும் தோள் கொடுக்கவில்லை. 

ஆனால் அமைச்சரோ ‘அரசுப்பள்ளிகளின் தரத்தை தனியாருக்கு இணையாக உயர்த்திவிட்டோம்.’ என்று வாயால் வடைசுடுகிறார். செங்கோட்டையன் சமூகத்துக்கு ஒரு கோரிக்கை....சிட்டியின் புறநகர் பகுதிகளிலும், கிராமங்களிலும் போய்ப் பாருங்க...வயதுக்கு வந்த மாணவிகள் இயற்கை உபாதைக்கு ஒதுங்கவும், நாஃப்கினை அப்புறப்படுத்தவும் கூட முடியாமல் படும் அவஸ்தைகளை. இதற்கு மேல் விளக்க கூச்சமாய் உள்ளது.” என்கிறார்கள். 
என்னத்த சொல்ல?