கருணாநிதி சுய நினைவுடன் திமுக தலைவராக இருந்த வரை எந்த ஒரு முடிவும் அவரது விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டதாக இருந்தது. மு.க.ஸ்டாலின் திமுக பொருளாராக இருந்த போதும், கட்சி நிர்வாகிகள் நியமனம் விவகாரத்தில் கருணாநிதி எடுக்கும் முடிவு தான் இறுதியானது. மு.க.ஸ்டாலின் விரும்புகிறார் என்பதற்காகவே கட்ச நிர்வாகிகள் நியமனத்தில் சமரசம் செய்து கொள்வதை கருணாநிதி தவிர்த்து வந்தார். திமுகவில் நீண்ட காலமாக இருந்த மாவட்டச் செயலாளர்களை நீக்கிவிட்டு புதியவர்களை ஸ்டாலின் நியமித்த போது கடைசி வரை கலைஞர் போராடி முக்கியமானவர்களை காப்பாற்றினார்.

தஞ்சை பழனிமாணிக்கம் உள்ளிட்ட ஒரு சிலரைத்தான் கருணாநிதியால் காப்பாற்ற முடியவில்லை. அந்த வகையில் கருணாநிதி இருக்கும் வரை ஸ்டாலினால் முழு அதிகாரத்துடன் செயல்பட முடியாத நிலையே இருந்தது. இதனால் கட்சி நிர்வாகிகளை பொறுத்தவரை கருணாநிதியை அணுகி தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதித்து வந்தனர். இதனால் கருணாநிதி –ஸ்டாலின் என இரண்டு பேரையும் நிர்வாகிகளால் சமாளிக்க முடிந்தது என்று கூறுகிறார்கள். ஆனால் தற்போதே ஸ்டாலினை மீறி உதயநிதி சில முடிவுகளை எடுக்கிறார் என்கிறார்கள். உதயநிதி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஓகே சொல்லும் நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்படுகிறார் என்றும் கூறுகிறார்கள்.

அதாவது கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் ஸ்டாலினை எப்படி சமாதானம் செய்வது என்கிற தந்திரத்தை உதயநிதி தரப்பு தெரிந்து வைத்துள்ளதாக சொல்கிறார்கள். தங்கள் தந்திரங்களை பயன்படுத்தி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு உதயநிதி தரப்பு பதவிகளை வெகு சுலபமாக பெற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது. அதிலும் உதயநிதியுடன் நெருக்கமாக இருக்கும் அன்பில் மகேஷ், ஜின்னா, டி.ஆர்.பி.ராஜா போன்றோர் இளைஞர் அணி நிர்வாகிகளை திமுகவின் நிர்வாகிகளாக மாற்றி வருகின்றனர். இதன் பின்னணியில் தங்களின் எதிர்கால அரசியலை மனதில் வைத்து அவர்கள் கணக்கு போடுவதாக சொல்கிறார்கள்.

இளைஞர் அணியில் இத்தனை நாட்கள் தங்களுக்கு விசுவாசமாக இருந்தவர்களை மாவட்டச் செயலாளர் போன்ற பதவிகளில் தற்போதே அமர்த்துவது தான் சிறந்து என்று உதயநிதி தரப்பு நம்புவதாக கூறுகிறார்கள். கருணாநிதி இருக்கும் வரை ஸ்டாலின் ஒருவரை ஒரு பதவிக்கு கொண்டு வர நினைத்தால் அதன் பின்னணியை அறிந்து அதற்கு ஏற்ப முடிவு எடுத்து வந்தார். ஆனால் தற்போது ஸ்டாலினுக்கு அப்படி ஒரு வாய்ப்பே இல்லாமல் இளைஞர் அணி நிர்வாகிகள் திமுகவின் முக்கிய பதவிகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தான் சீனியர்களின் டென்சனுக்கு காரணம் என்று சொல்கிறார்கள். இதனால் கட்சியை விட்டு பலரும் விலகி வருகிறார்கள்.  வி.பி.துரைசாமி, எம்.எல்.ஏ., கு.க.செல்வம் ஆகியோர் விரக்தி அடைந்து பாஜகவுக்கு தாவிய நிலையில் இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி, திமுகவிலிருந்து சீனியர்கள் பலர் வெளியேறுவார்கள் என பேட்டி அளித்திருக்கிறார். 

‘’திமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் வெளியேறுவார்கள். திமுகவில் பதவி தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. மூத்த நிர்வாகிகளின் விரக்திக்கு வேறு பல காரணங்களும் உண்டு. தேர்தலுக்கு பிறகு திமுக சரிவை சந்திக்கும்’’ என பேட்டியளித்துள்ளார். இது திமுக வட்டாரத்தை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.