ஜெயலலிதாவிற்கு விஷம் கொடுத்ததற்கான ஆதாரம் இருக்கிறதா என அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பண்ரூட்டி ராமச்சந்திரன் மற்றும் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய செங்கோட்டையன் உண்மைக்கு மாறாக சிலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என குற்றம் சாட்டினார்.

பதவியை விட கட்சிதான் முக்கியம் என்ற உணர்வோடு அதிமுக நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்றும் அதிமுக அரசியலில் குழப்பத்திற்கு பி.எச் . பாண்டியனே காரணம் எனவும் தெரிவித்தார். அதிமுக வளர்ச்சிக்கு பி.எச் பாண்டியன் ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை எனவும் அவர் அதிமுக வுக்கு நன்றியுணர்வோடு செயல்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இதனிடையே ஜெயலலிதாவுக்கு விஷம் கொடுத்திருப்பதாக தகவல் வெளிவருகிறது என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன் ஜெயலலிதாவிற்கு விஷம் கொடுத்ததற்கான ஆதாரம் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.

மேலும் பழி சுமத்துவது சுலபம், அதை நிரூபிப்பது கடினம் எனவும் தெரிவித்தார். இதுகுறித்து மருத்துவர்கள் யாரும் கூறவில்லையே எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
