sengottayan pressmeet about discussion with ops team

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை நடந்தது. பின்னர், வெளியே வந்த அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இரட்டை இலை சின்னத்தை மீட்பது குறித்து, டிடிவி.தினகரனுடன் ஆலோசனை நடத்தினோம். இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு பிரமாண பத்திரம் தயார் செய்ய வேண்டும். அதனை முறையாக கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதிமுகவில் 2 அணிகளாக இருப்பது முறையானதாக இல்லை. இதனால், ஒன்றாக இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இதுபற்றி அமைச்சர்கள் அனைவரும் கலந்து ஆலோசனை செய்தோம். அதுபற்றி டிடிவி.தினகரனிடம் எடுத்து கூறியுள்ளோம்.

இரு அணிகளையும் ஒன்று சேர்க்க குழு அமைக்க முடிவு செய்துள்ளோம். குழுவினர், ஓ.பி.எஸ். தரப்பினரிடம் பேசி, நல்ல முடிவை கொண்டு வருவார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மீண்டும் இணைவதால், அனைவருக்கும் சந்தோஷம்தான். ஒன்றாக இணைந்து செயல்பட்டால், இரட்டை இலை சின்னத்தை மீட்டு ஆட்சியை நன்றாக நடத்த முடியும்.

ஓ.பி.எஸ். அணியினருடன் இதுவரை எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. அதற்குள், அவர்களது நிபந்தனைகளை பற்றி எதுவும் கூற முடியாது. கலந்து பேசிய பின்னரே, எதையும் உறுதியாக கூற முடியும்.

டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறித்து, டிடிவி.தினகரன் மட்டுமே பதில் சொல்ல முடியும். நாங்கள் எதையும் கூற முடியாது.

தற்போது எங்களது இலக்கு இரட்டை இலையை மீட்பது மட்டுமே. இதையே அனைத்து அதிமுகவினரும் விரும்புகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எப்போது வேண்டுமானாலும் எங்களுடன் இணையலாம் என ஏற்கனவே டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.