sengottayan pressmeet about dinakaran release
டெல்லி திஹார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தொடர்ந்து அரசியல் பணிகள் செய்வது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவெடுப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அதிமுக 2 ஆக உடைந்து சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் உருவானது.சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து டி.டி.வி.தினகரன் கட்சிப் பொறுப்புகளை கவனித்து வந்தார்.
பின்னர் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரனும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து இரு அணிகளும் இணைவத தொடர்பான பேசிசுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதில் ஓபிஎஸ் அணி சார்பில் சசிகலா மற்றும் தினகரன் கட்சியை விட்டு விலக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, சென்னை திரும்பி அரசியல் பணிகளைத் தொடர்வேன் என கூறினார். தன்னை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து திருத்தணியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தினகரன் கட்சிப் பணிகளில் தொடர்வது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவெடுப்பார் என கூறினார்.
நேற்று இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயகுமார், நாங்கள் யாரும் தினகரனை சந்திக்கப் போவதில்லை என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
