முதலமைச்சர் யார், துணை முதல்வர் யார் என்பதில் தற்போது பிரச்சனை கிளம்பியுள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதையொட்டி இரு அணிகளும் இரு துருவங்களாக செயல்பட்டன.

சசிகலா அணி சார்பில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்தது. இதைதொடர்ந்து அவர், முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில் இரு அணிகளும் மீண்டும் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரு தரப்பினரும், இதையே அறிவித்துள்ளனர். ஆனால், அவர்களுக்குள் உள்ள உடன்படிக்கை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

நேற்று ஒரு நாள் மட்டும் மக்களை துணை சபா நாயகர் தம்பிதுரை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது, இரு அணிகளும் மீண்டும் இணைவது குறித்து பேசியதாக தெரிகிறது.

இதுபற்றி கூறிய தம்பிதுரை, “அதிமுகவின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். ஆனால், இரு அணிகளும் இணைவது உறுதி” என்றார்.

இந்நிலையில், ஐஎன்எஸ் சென்னை போர்க் கப்பலில் அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அதில் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், அதிமுகவில் பிளவு பட்ட இரு அணிகளும் மீண்டும் இணைகிறது. இதனால் கட்சியையும், சின்னத்தையும் மீட்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

ஆனால், முதலமைச்சர் யார், துணை முதல்வர் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடியுடனும், டிடிவி.தினகரனுடனும் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்றனர்.