சட்டப்பேரவையின் அவை முன்னவராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட கீழ் நீதிமன்றத்தின் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததை தொடர்ந்து, சட்டசபை அ.தி.மு.க. கட்சியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததையடுத்து தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார்.

அவருடன் செங்கோட்டையன் உள்பட 30 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். சட்டசபையில் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கவர்னர் உத்தரவிட்டிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி, பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை கூடுகிறது. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பொன்னையன், மாஃபா பாண்டியராஜன், சண்முகநாதன், செம்மலை ஆகியோர் சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசினர்.

அப்போது சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் தேர்வு முறையை ரகசியமாக நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக தெரிகிறது.

பின்னர், சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் சட்டப்பேரவையின் அவை முன்னவராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.