சில வெட்டுக்கிளிகள், வேடந்தாங்கல் பறவைகள் சென்றாலும் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது -செங்கோட்டையன் ஆவேசம்
விட்டு சென்றவர்களைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தனித்து போட்டியிட யாருக்கும் தைரியம் இல்லை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் வாக்குசாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தை தொடங்கியுள்ளன. இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலேயே ஒன்றியம், நகரம் என்றே இத்தனை பேர் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் அதிமுக கூட்டத்தைக் கூட்டினால் எந்த கட்சியும் அதனுடன் போட்டி போட முடியாது. தமிழ்நாட்டில் எதாவது ஒரு கட்சியை தனித்து போட்டியிட சொல்ல சொல்லுங்க.. அதிமுகவை தவிர வேறு எந்த கட்சியும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட முடியாது.
அதிமுகவை வீழ்த்த முடியாது
விட்டு செல்கின்றவர்களை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை சில வெட்டுக்கிளிகள், வேடந்தாங்கல் பறவைகள், பட்டாம் பூச்சிகள் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றாலும் தமிழ் மண்ணில் யாராலும் நம்மை வீழ்த்த முடியாது வரலாறும் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களும் மருத்துவர் ஆகலாம் என்ற சாதனையை படைத்தவர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி எனவும் அவர் கூறினார். நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்