Asianet News TamilAsianet News Tamil

இதுதான் நேரம்.. முதல்வர் ஐயா துணிந்து முடிவெடுங்க.. தூண்டும் சீமான்..

எழுவர் விடுதலை என்பது மாநில அரசால் 161வது சட்டப்பிரிவின் கீழ் கோரப்பட்டுள்ளதாலும், மாநில அரசின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என உச்ச நீதிமன்றம் அறுதியிட்டுத் தீர்ப்புக் கூறியுள்ளதாலும் தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து, விடுதலைக்கு ஒப்புதலைப் பெற்று எழுவரையும் விடுவிக்க வேண்டியதற்கான முன்னெடுப்புகளைத் தொடங்க வேண்டியது பேரவசியமாகிறது.

Seman demand tamilnadu cm to release 7 tamils. based on supreme court order.
Author
Chennai, First Published Aug 5, 2021, 1:24 PM IST

14 ஆண்டுகளைக் கடந்த சிறைவாசிகளை மாநில அரசே விடுதலை செய்யலாம் என அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் வழிகாட்டுதலைக் கொண்டு, ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது, அரியானா மாநில வழக்கொன்றில் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், 14 ஆண்டுகள் தண்டனை முடித்த சிறைவாசிகளின் விடுதலையை மாநில அரசே முடிவுசெய்து அறிவிக்கலாம் எனக் கூறியிருப்பது நம்பிக்கையைத் தருகிறது.

14 ஆண்டுகளுக்கு மேலான காலம் தண்டனை அனுபவித்த சிறைவாசிகளின் தண்டனைக்குறைப்பு மற்றும் விடுதலை குறித்த முடிவை எடுக்க மாநில அரசுக்கு அதிகாரமுண்டு என வந்திருக்கும் இத்தீர்ப்பு, ஏழு தமிழர்களின் விடுதலைக்கான முன்நகர்வுக்கு உதவிகரமாக இருக்குமெனப் பெரிதும் நம்புகிறேன். தண்டனை பெற்றுவரும் சிறைவாசிகளை விடுவிக்க ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை என அரியானா அரசு, 2008ல் கொண்டு வந்த கொள்கை திட்டத்திற்கெதிராகத் தொடரப்பட்ட வழக்கில், 14 ஆண்டுகளைக் கடந்த சிறைவாசிகளின் விடுதலை தொடர்பான மாநில அரசின் உரிமையை உறுதிப்படுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம். 

14 ஆண்டுகளுக்குக் குறைவான காலம் தண்டனையை அனுபவித்த சிறைவாசிகளின் விடுதலைக்கு 161வது சட்டப்பிரிவின்படி ஆளுநரின் ஒப்புதல் தேவை; அதுவும் மாநில அரசின் ஆலோசனைப்படிதான், ஆளுநர் செயல்பட வேண்டும் எனத் தீர்ப்பில் மாநிலங்களின் சிறைத்துறை உரிமையை வரையறுத்து, தெளிவுப்படுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம். மேலும், மரணத் தண்டனை சிறைவாசிகளை 14 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்காது விடுவிக்கக்கூடாது என வழிகாட்டியிருக்கிறார்கள் நீதிபதிகள். இதன்மூலம், எழுவர் விடுதலைக்கு இடப்பட்ட மாநில அரசின் தீர்மானத்திற்கு ஒப்புதல் கையெழுத்திடாது; காலந்தாழ்த்தி, அதனைக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் செயல்பாடானது சட்டவிதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதும், விடுதலைக்கு இசைவு தர வேண்டியது ஆளுநரின் கடமை என்பதும் மிகத்தெளிவாகப் புலனாகிறது.

14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த சிறைவாசிகளை விடுதலைசெய்வது மாநிலங்களின் தார்மீக உரிமை என்பது உச்ச நீதிமன்றத்தீர்ப்பின் வாயிலாக நிலைநிறுத்தப்பட்டிருப்பதன் மூலம் எழுவர் விடுதலைக்கான தடைக்கற்கள் யாவும் நீக்கப்பட்டிருக்கிறது என்றே கருதலாம். எழுவர் விடுதலை என்பது மாநில அரசால் 161வது சட்டப்பிரிவின் கீழ் கோரப்பட்டுள்ளதாலும், மாநில அரசின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என உச்ச நீதிமன்றம் அறுதியிட்டுத் தீர்ப்புக் கூறியுள்ளதாலும் தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து, விடுதலைக்கு ஒப்புதலைப் பெற்று எழுவரையும் விடுவிக்க வேண்டியதற்கான முன்னெடுப்புகளைத் தொடங்க வேண்டியது பேரவசியமாகிறது.

ஆகவே, எழுவர் விடுதலை குறித்தான முடிவெடுக்கத் தனக்கு அதிகாரமில்லையெனக்கூறி, அதனை குடியரசுத்தலைவரது பக்கம் தள்ளிவிட்டு, மொத்தமாக மடைமாற்றம் செய்திருக்கும் ஆளுநரின் செயல் ஏமாற்று வேலை என்பது சட்டரீதியாகத் தெளிவுப்படுத்தப் பட்டிருக்கும் சூழலில், குடியரசுத்தலைவருக்குக் கோரிக்கை வைக்கும் வெற்று நாடகத்தைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான சட்டநடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் எனவும், சிறைவாசிகளின் விடுதலை குறித்தான முடிவெடுக்கும் மாநிலத்தன்னுரிமை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வாயிலாக நிலைநாட்டப்பட்டுள்ளதால் எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, தனது அமைச்சரவையைக் கூட்டி, எழுவர் விடுதலையின் முடிவை மீண்டும் உறுதிசெய்து, ஆளுநருக்கு அனுப்பி அவர்களின் விடுதலையை சாத்தியப்படுத்தத் துணிய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios