Seloor Raju works unnecessarily against transport protest people
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு அடியாட்களை அழைத்து வந்து பேருந்துகளை இயக்க முயல்வதாகவும் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 19,500 வழங்க வேண்டும், ஓய்வூதியம், பணிக்கொடை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், வருங்கால வைப்புத்தொகையை உரிய கணக்கில் சேர்க்க வேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த 7000 கோடி நிதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
13வது ஊதிய ஒப்பந்தத்தில் 2.57% ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2.44% என்ற ஊதிய உயர்வு வழங்குவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சில மறுத்துவிட்டன. சில சங்கங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால், தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சங்கங்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னறிவிப்பின்றி திடீரென நடத்தப்பட்ட இந்த வேலைநிறுத்தத்தால் பொதுமக்களும் பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உடனடியாக வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டது.
ஆனாலும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலைநிறுத்தத்தை கைவிட முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் மூன்றாவது நாளாக தொடர்ச்சியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து நாளைக்குள் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை போக்குவரத்து பனிமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிலரை வைத்து பேருந்து இயக்கு முற்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் அங்கு திடிரென திரண்ட போக்குவரத்து ஊழியர்கள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எதிராக குரல் எழுப்பினர்.
அப்போது, அமைச்சர் செல்லூர் ராஜு அடியாட்களை அழைத்து வந்து பேருந்துகளை இயக்க முயல்வதாகவும் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.
