மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் மதுரை மாநகர் முழுவதும் ஒவ்வொரு வாரமும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

மதுரையில் அதிகம் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பல பகுதிகளில்  இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மதுரை எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் சாலை பாதுகாப்பு விடுமுறை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லுர் ராஜு பங்கேற்றுப் பேசினார்.

அப்போது மது போதையினால் பல்வேறு விபத்துகள் நடைபெற்று கொண்டேதான் இருக்கிறது. இதன் மூலமாக விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோய் கொண்டு வருகின்றது. இதனால் ஒரு இழப்பை சந்தித்த குடும்பத்தாரும் உற்றார் உறவினரும் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது நமக்கு தெரிந்த ஒன்று என கூறினார்.
.
சாலை விழிப்புணர்வு குறித்து நாம் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். சாலை விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்ற அவர்,  6 ஆண்டுகளுக்கு முன்பு எனது ஒரே மகன் சாலை விபத்தில் இறந்து போனான். அந்த மரணத்தின் போது எனது  குடும்பம் மற்றும் உறவினர்கள்  அதிகம் பாதிக்கப்பட்டனர்.  என கூறினார்.

என் மகனை ஒரு சாலை விபத்தில் பறி கொடுத்தவன் என்ற முறையில் இதை உங்களுக்குச் சொல்கிறேன் என அவர் தெரிவித்தார்.. என் மகன் இறந்து ஆறு ஆண்டுகள் ஆகியும் நானும் எனது மனைவியும் இன்னும் அந்த நினைவுடன் இருக்கிறோம் என கூறி அமைச்சர் செல்லூர் ராஜு கண்ணீர்விட்டார்.

சென்னை பாரீஸ் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றதால் சாலை விபத்தில் அமைச்சரின் மகன் தமிழ்மணி மரணமடைந்தார். இதை நினைத்து தான் அமைச்சர் செல்லூர் ராஜு கண்ணீர்விட்டு அழுதார். அமைச்சரின் இந்த பேச்சால் விழாவுக்கு வந்திருந்த பொது மக்களும் கண் கலங்கினர்.