முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி என்பதால் அவர் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை பெற்றுக் கொடுத்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களை அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘’மற்ற மாநிலங்களில் இப்போதுதான் விவசாயிகளை ஏறெடுத்து பார்க்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அம்மாவின் அரசு அம்மா ஆட்சியில் இருந்தது முதல் இதுவரை 90 லட்சம் விவசாயிகளுக்கு பல நிலைகளில் ஏறத்தாழ ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு பல்வேறு உதவிகளை செய்திருக்கிறது.

தானே புயல், வர்தா புயல் உள்ளிட்ட பல புயல்கள் வந்தன. முதல்வர் இப்போது பல்வேறு உதவிகளை அறிவித்திருக்கிறார். எனவே அந்த மாதிரி ஒருநிலை இப்போது இல்லை. கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக முதல்வர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கொடுத்த கடன்கள் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது.

12 லட்சம் விவசாயிகளுக்கு அம்மா ஏறத்தாழ ரூ.5,318 கோடி நிலுவையில் கடன்களை தள்ளுபடி செய்தார். அது போன்ற நிலை இப்போது இல்லை. விவசாயிகள் டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்துவது மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே அதிகமான அளவுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தை பெற்றுக் கொடுத்தது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுதான். அவரும் ஒரு விவசாயி என்பதால் இதை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக செல்கிறார். அவரது தந்தை காலத்தில் கூட இதை பெற்றுக் கொடுக்கவில்லை. அதிமுகவைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மட்டுமே கடன் கொடுக்கப்படுகிறது என்பது தவறான தகவல். தகுதியான குழுக்களுக்கு ஏற்கனவே ரூ.5 லட்சம் வரை கொடுக்கப்பட்டது. இப்போது ரூ.10 லட்சம் கூட பெற்றுக் கொள்ளலாம். கூட்டுறவு வங்கிகளில் நிறைய பணம் இருக்கிறது. டெபாசிட் அதிகமாக வந்துள்ளது. தகுதியானவர்களை வரச் சொல்லுங்கள். வந்தால் கடன் கொடுக்க நாங்கள் தயார்? நீங்கள் தயாரா? என அவர் தெரிவித்தார்.