கட்சிக்காக உழைக்காமலே, பதவிக்கு வந்த ஒ.பன்னீர்செல்வம், பதவிக்காக சசிகலா மீது குற்றஞ்சாட்டுகிறார் என எம்பி நவநீதகிருஷ்ணன் கூறினார்.
முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், நேற்று இரவு ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று, சுமார் ஒரு மணிநேரம் தியானம் செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக பொது செயலாளர் சசிகலா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இதை தொடர்ந்து தற்போது, அவரது வீட்டில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிலையில், அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கட்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் பொது செயலாளர் சசிகலா. ஜெயலலிதாவுடன் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக உடனிருந்து, கட்சி பணிகளையும், ஆட்சி பணிகளையும் கண் கூடாக பார்த்து அறிந்தவர் சசிகலா.

ஆனால் ஓ.பன்னீர்செல்வம், கட்சிக்காக எந்த பணியும் செய்யவில்லை. உழைக்காமல் பதவிக்கு வந்தவர். இப்போதும், உழைக்காமலேயே பதவி வேண்டும் என்ற ஆசையில் சசிகலா மீது பழி போடுகிறார். சசிகலா முதலமைச்சர் ஆவதற்கு, தொண்டர்களும், மக்களும் விரும்புகிறார்கள்.

ஆனால், பன்னீர்செல்வம் பதவிக்காக, பொது செயலாளர் மீது பழி போடுகிறார். பதவி ஆசை பிடித்து தவறாக பேசி வருகிறார். அவர் ஒரு சுயநலக்காரர் என்றார்.
