இழுத்து மூடப்படும் சேகர் ரெட்டி மற்றும் விவேக் நிறுவனங்கள்…அமலாக்கத்துறை அதிரடி…
உயர் மதிப்புள்ள பணம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் வருமான வரித்துறையினரும், அமலாக்கத்துறையினரும் அதிரடி சோதனைகள் நடத்தி பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியிலும்,அதிகார வர்க்கத்திலும் கோலோச்சி வருவதாக கூறப்படும் தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவருடைய உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத 131 கோடி ரூபாயும், 138 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரது வீடுகள் மற்றும் அலுவலங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இந்நிலையில் சேகர் ரெட்டி மற்றும் விவேக் ஆகியோர் தொடங்கிய 15 நிறுவனங்களுக்கு மூலதன ஆதாரம் எதுவும் இல்லாதது அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. முறைகேடாக பெற்ற பணத்தில் இருந்துதான் இந்நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதால் அவற்றை இழுத்துமூடி சீல் வைக்க அமலாக்கப் பிரிவு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
