ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு; ஒரே தேர்தல் என்ற திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ஆர்வம் காட்டிவருகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்திவருகிறது. இத்திட்டத்துக்கு அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவு, எதிர்ப்பு என இரண்டுமே இருந்துவருகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை இடதுசாரிகள் எதிர்க்கவில்லை என்று அண்மையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் தெரிவித்திருந்தார். ஆனால், மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


இதுபற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, “இந்தியாவில்  நாடாளுமன்றத்திலோ சட்டப்பேரவையிலோ பெரும்பான்மை உள்ள கட்சியே ஆட்சி அமைக்க முடியும். ஒரு வேளை குறிப்பிட்ட கட்சிக்கு பெரும்பான்மை இல்லாமல் போனால் அந்த ஆட்சி எப்படித் தொடர முடியும்? அவர்கள் மீண்டும் தேர்தலை நடத்தி மக்களை நாட வேண்டிய நிலை ஏற்படும். இதுபோன்ற சூழலில் மாநில சட்டப்பேரவைக்கோ நாடாளுமன்றத்துக்கோ மீண்டும் தேர்தலை நடத்தும் நிலை ஏற்படும்.

 
இதுதான் இந்திய அரசியல் அமைப்பின் விதிமுறை. ஆனால், தற்போது மத்திய அரசு திடீரென ஒரே நாடு; ஒரே தேர்தல் என்று பேசிக்கொண்டு  இருக்கிறது. நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறிவருகிறது. இதை முறையாக செயல்படுத்த வழிமுறைகள் இருப்பதாக எதுவும் தெரியவில்லை. மத்திய அரசின் இந்தக் கொள்கை  இந்திய அரசியல் அமைப்பு  சட்டத்துக்கு எதிரானது. எனவே இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது.” என்று தெரிவித்தார்.