மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள அறிக்ைகயில், “ புத்தாண்டு உரையாக பிரதமர் மோடி பேசிய 45 நிமிடங்களும் கடந்த 50 நாட்களாக ரூபாய் நோட்டு தடையால் மக்கள் அனுபவித்த வேதனைகளுக்கு நிவாரணம் தரும் வகையில் ஏதும் இல்லை. அவரின் பேச்சு, அடுத்து வரும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல்களை மனதில் வைத்து வெளியிடப்பட்ட பட்ஜெட் அறிவிப்புகள் போல் இருக்கிறது.

கருவுற்ற பெண்களுக்கு ரூ.6 ஆயிரம்  உதவித்தொகை திட்டம், கடந்த 2013-ம் ஆண்டு தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தில் இருக்கும் ஒரு பகுதியாகும்.

ரூபாய் நோட்டு தடையால் பல வேதனைகளை அனுபவித்த தினக்கூலிகள், மீனவர்கள், வேளாண் பணியாளர்கள், ஆகியோருக்கு எந்தவிதமான நிவாரணத்தையும் மோடி அறிவிக்கவில்லை. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி குறித்து ஏதும் இல்லை.

வங்கி முன் வரிசையில் கால்கடுக்க நின்ற மக்களைப் பற்றித்தான் மோடி பேசினார், ஆனால், வரிசையில் நின்றதால், ஏற்பட்ட மனஅழுத்தம், வேதனையால் இறந்த 115 பேருக்கு இழப்பீடு குறித்து ஏதும் அறிவிக்கவில்லை.  அனைத்து பணமும் வங்கிக்கு வந்துவிட்டதாக மோடி கூறுகிறார். அப்படியானால், அனைத்து கருப்புபணமும், வெள்ளையாக மாற்றப்பட்டுவிட்டதா?. கள்ளநோட்டும் வந்துவிட்டதா?.இதில் யார் முட்டாள் ஆக்கப்பட்டார்கள்?.

நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலையும், நாடாளுமன்றத் தேர்தலையும் ஒரேநேரத்தில் நடத்த வேண்டும் என மோடி ஆசைப்படுகிறார். அப்படியானால், அரசியலமைப்பில் 356 சட்டப்பிரவை நீக்க அவர் தயாராக இருக்கிறாரா?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மை அறிக்கை எங்கே?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், எம்.பி.யுமான.டி.ராஜா கூறுகையில், “ பிரதமர் மோடியின் புத்தாண்டு உரை, எதிர்வரும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில்வைத்து பேசப்பட்டுள்ளது. விவசாயிகள், தலித்துகள், ஏழைகளை ஏமாற்றும் விதத்தில் மோடி பேசி இருக்கிறார். மோடியின் இது போன்ற பேச்சுக்கு மக்கள் ஏமாந்து விடமாட்டார்கள்.

நேர்மையான மக்கள் ரூபாய் நோட்டு தடை முடிந்தபின் நம்மதியாக உறங்குவார்கள் என மோடி கூறினார். ஆனால், கருப்புபணம், கள்ளநோட்டு பிடிபட்டது குறித்து அறிக்கை ஏதும் இல்லை. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட கருப்புபணம், வாராக்கடன் , கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏமாற்றுத்தனம் குறித்தும் ஏதும் அறிவிக்கவில்லை.

கருவுற்ற பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டம் தேசிய உணவுப்பாதுகாப்பு திட்டம் 2013-ன் ஒரு பகுதியாகும். இதை கடந்த 2½ ஆண்டுகளாக ஏன் அமல்படுத்தவில்லை என்பது குறித்த வழக்கு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. அந்த வழக்கில்  நீதிமன்றத்தில் அரசு சார்பில் மன்னிப்பு கோர வேண்டும்'' எனத் தெரிவித்தார்.