நாம் தமிழர் கட்சியில்  மதுரை மாவட்டச் செயலாளர் தமிழ்மணி, தனக்கு திருமணம் நடந்தபோது சீமானிடம் நேரில் சென்று ஆசிவாங்கியவர். இவர் வத்ராயிருப்பு என்ற ஊரில் நகைக்கடை நடத்தி வருகிறார். 

சீமானின் தீவிர பற்றாளர் என்றே சொல்லலாம். தன் கையில் சீமான் பெயரை பச்சை குத்தியிருக்கிறார். எப்போது பார்த்தாலும் கையில் கட்சி நோட்டீஸ் வைத்துக்கொண்டு, வருவோர் போவோரிடம் கொடுத்து கொண்டே இருப்பவர். தன் கடையில் வரும் வாடிக்கையாளர்களிடமும் கட்சி கொள்கை நோட்டீஸ் கொடுப்பது வழக்கம். அந்தளவுக்கு கட்சி மீது பற்று உள்ளவர். 2016 சட்டமன்ற தேர்தலில் திருமங்கலத்தில் நாம் தமிழர் வேட்பாளராக நின்றவர் தமிழ்மணி.

அவரின் இரண்டு குழந்தைகளுக்கும் இன்பதமிழன், தமிழ்நிலா என சீமான்தான் பெயர்சூட்டி மகிழ்ந்தார். கணவரின் வழியே அவரது மனைவி ஜான்சியும் நாம் தமிழர் கட்சியில் பெரும் ஈடுபாடு உள்ளவர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணி பொறுப்பாளர் துரைமுருகன்  தமிழ்மணியின் நகைக்கடையில் நகை வாங்கிவிட்டு 65 ஆயிரம் பாக்கிவைத்துவிட்டு சென்றுவிட்டார். தமிழ்மணி எப்போது பார்த்தாலும் கட்சிப் பணியையே பார்த்துக்கொண்டிருத்தால் நகைக்கடையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.


அப்போதுதான் துரை முருகனிடம், தமிழ்மணி நகைவாங்கியதற்கான பாக்கித் தொகை 65 ஆயிரத்தைக் கேட்டுள்ளார்.

அதற்கு துரைமுருகன் , நாம் தமிழர் கட்சியில் மாநில அளவில் பொறுப்பு வாங்கித் தருகிறேன்  என ஆசைவார்த்தை பேசியுள்ளார். ஆனால் தமிழ்மணியோ எனக்கு பதவி வேண்டாம், பணத்தை மட்டும் திருப்பித் தந்தால் போதும் என கேட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்த துரைமுருகன், கடுமையான வார்த்தைகளை உபயோகித்து திட்டி இருக்கிறார். இதையடுத்து தமிழ்மணியும் அவரது மனைவி ஜான்சியும் இது குறித்து சீமானிடம் புகார் கூறியுள்ளனர்.

அப்போது எதிர்முனையில் பேசிய சீமான் , உன்னைப்பற்றி துரைமுருகன்  சொல்லிட்டான்பா அவரை பிளாக்மெயில் பண்றியாமே. அண்ணனுக்கு நான் நெருக்கம். அடிக்கடி போனில் பேசுகிறேன், உன்னை மாநில பொறுப்பில் இருந்து எடுத்திடுவேன் என்று மிரட்டுகிறாயாமே என்று ஒருமையில் திட்டி இருக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்மணி , என்னண்ணே இப்படி சரியாக விசாரிக்காமல் கண்டமேனிக்கு திட்டுகிறீர்கள். என் மனைவி அருகில் இருக்காங்க. நாங்க இரண்டுபேருமே உங்க மேல அளவுகடந்து பாசம் வச்சிருக்கோம் என்று சொல்ல, அதை காதில் வாங்காமல், உன்னை கட்சியிலிருந்து இந்த நிமிடமே நீக்குகிறேன் வெளியே போடா நாயே.. என்று கோவமாக திட்டி போனை வைத்துவிட்டார்.

இதையடுத்து கடும் வேதனையடைந்த தமிழ்மணி தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அவரை காப்பாற்றி ஆறுதல் சொல்லி கடைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் தமிழ்மணியின் மனைவி ஜான்சி.

ஆனால் தமிழ்மணி வேலைக்கு போன சிறிது நேரத்தில், மனைவி ஜான்சி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ஜான்சியின் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த சீமானிடம், அண்ணே என் தெய்வம் போயிட்டா அண்ணே என்று கதறி அழுதபோது, அருகில் இருந்தவர்கள் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த பிரச்சனை தொடர்பாக உண்மையை விசாரித்து தெரிந்து கொண்ட சீமான் , தமிழு என்னை மன்னிச்சிடுடா என்று சீமான் கதறி அழுதுள்ளார். அந்த சோகத்திலும் கூட ''நீங்க சிங்கம்ண்ணே ...என் தலையெழுத்து ...''என்று  தமிழ்மணி ஓவென்று கதறி அழுதது அனைவரது  நெஞ்சையும் உலுக்கி எடுத்தது.