ஈழத் தமிழர்கள், ஈழ விவகாரம், ஈழ சுதந்திரம், தனி ஈழம் என பக்கத்து நாடான இலங்கையில் இருக்கும் ஒரு தனிப்பெரும் பகுதியை மையப்படுத்தித்தான் இந்தியாவிலிருக்கும் தமிழ்நாட்டில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் சீமான். 


அதிலும் உச்சமாக ‘ஆமாங்க! ராஜிவ்காந்தியை கொன்றது விடுதலைப்புலிகள்தான். நாங்கதான்’ என்று அவர் சமீபத்தில் கொளுத்திப்போட்ட பட்டாசு பெரும் பிரளயத்தையே உருவாக்கி உள்ளது. 

பிரபாகரனை சீமான் பார்த்த்தே இல்லை! என்று சொல்லி சீமானுக்கு எதிராக கொம்பு சீவிக் கொண்டிருந்த அரசியல் கட்சிகள், இந்த விவகாரத்தை மையப்படுத்தி ’விடுதலைப் புலிகளே மறுத்த ஒரு விஷயத்தை, அவர்கள்தான் ராஜீவை கொன்றார்கள் என்று சீமான் சொல்லியிருப்பது அவலமான செயல். இவரது உளறலால், விடுதலையின் விளிம்பில் இருக்கும் ஏழு பேருக்கு பின்னடைவுதான்.’ என்று சரமாரியாக தாக்கினர். 


இந்த நிலையில், ‘விடுதலைப்புலிகளுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை, பிரபாகரனை சீமான் பார்த்ததேயில்லை’ எனும் விமர்சனங்கள் அவரது நெஞ்சை  அதிகமாக தைத்துவிட்டதாம். எனவே, பிரபல வாரம் இருமுறை பத்திரிக்கையில் தான் எழுதிக் கொண்டிருக்கும் தொடர் ஒன்றில் கொதித்துக் கொந்தளித்திருக்கிறார் சீமான். 

 மேதகு பிரபாகரன்  மற்றும் விடுதலைப்புலிகளுடனான தனது நெருக்கம் குறித்து இதுவரையில் தான் சொல்லியதெல்லாம் வெறும் தூறல்கள்! எனவும், இனிதான் அடை மழை பொழிய உள்ளது! என்றும் கிலி கிளப்பியுள்ளார். 


இது தொடர்பாக அவர் எழுதியிருக்கும் கட்டுரையின் ஹைலைட் வரிகள் இதோ....


*    கருணாநிதி முதல்வராக இருந்தபோது ‘தேசிய பாதுகாப்பு சட்டத்தை’ என் மேல் பாய்ச்சி, என்னை வேலூர் சிறையிலடைத்தார். அங்கே என்னை பார்க்க வருபவர்களிடம், ‘முதலில் என் தம்பிகளை (ராஜீவ் கொலையாளிகள்! என்று குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வாடுவோர்) பார்த்துவிட்டு வாருங்கள்.’ என்று சொல்லி அனுப்பினேன். 

நான் சிறையிலிருந்த காலத்தில் அவர்களை சந்தித்தவர்களின் எண்ணிக்கை ஐம்பது ஆயிரம். உலகத்தையே அவர்களை வந்து பார்க்க வைத்தவன் இந்த சீமான். 

*    என்னால் ஏழு பேரின் விடுதலைக்கு தீங்கா!? நல்ல நகைச்சுவை இது. ‘ஏழு பேரின் விடுதலையை சாத்தியப்படுத்த முடியாவிட்டால், நாம் எப்படி இனத்தின் விடுதலையை சாத்தியமாக்க முடியும்?’ என்று வேலூரிலேயே கூட்டம் போட்டு முழங்கியவன் நான். 


*    நான் ஈழம் சென்றபோது அண்ணன் பிரபாகரனை சில நிமிடங்கள் மட்டுமே பார்த்ததாகவும், ஆனால் மணிக்கணக்கில் உரையாடியது போல் நான் இப்போது கதையளப்பதாகவும் கதை சொல்கிறார்கள் சிலர்.  ஈழத்துக்கு தாங்கள் சென்று வந்த புகைப்படங்களை, மண்ணுக்குள் போட்டு புதைத்த தைரியசாலிகள் தான் இன்று என்னை பொய்யாக விமர்சிக்கின்றனர். 

*    ’சாவின் விளிம்பில் நிற்கிறோமடா தம்பி. நான் பேசுவதைப் பதிவு செய்து சீமானிடம் கொடு. இதுவே என்னுடைய கடைசி பேச்சாக இருக்கலாம். அப்படின்னு சீமானிடம் சொல்லுங்க. அவரை போராட்டத்தை முன்னெடுக்க சொல்லுங்க!’ என்று கடற்புலித் தளபதி அண்ணன் சூசை பேசிய குரல் பதிவு இது. இதை பற்றி செய்தி வெளியானதும் ‘சீமானிடம் போராட்டத்தை கொடுத்துவிட்டு செல்லும் அளவுக்கு சூசை ஒன்றும் அறிவில்லாதவர் இல்லை’ என்று பொங்கினார்கள் என்னை விரும்பாதோர். அதனால் வேறு வழியின்றி சூசையின் குரல் பதிவை வெளியிட்டேன். அதன் பின் எனக்கு வந்த இக்கட்டுகள், நெருக்கடிகள் ஏராளம். 


*    ஆனால் இன்னொரு உண்மையைச் சொல்ல வேண்டும். சூசை அண்ணனின் குரல் பதிவு வெளியான பின், உலகெங்கும் இருந்து பல குரல்கள் என்னை தொடர்பு கொண்டன. ‘உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு. நீங்கள்தான் முன்னெடுத்து செல்ல வேண்டும்.’ என்று கதறினார்கள். இந்த எழுச்சியை கண்டு, என்னை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்தே போனார்கள். இப்படி எண்ணற்ற உதாரணங்களை தருவேன். 

*    என்னை சீண்டிச் சீண்டி பல உண்மைகளை என்னை நிரூபிக்க வைப்பதே சிலரின் வேலையாகிவிட்டது. மேதகு பிரபாகரனை நான் சந்தித்தது பற்றி இதுவரையில் சொன்னதெல்லாம் சிறு சாரல், தூறல்கள்தான். இனிதான் அடைமழையாய் பொழியப்போகிறேன். தலைவனைப் பற்றிய இந்த தம்பியின் பயணம் விரைவில் துவங்குகிறது. படிக்க, வெடிக்க, துடிக்க தயாராக இருங்கள்!
............என்று சொல்லியிருக்கிறார். 


ஆனால் இதற்கும் சீமானின் எதிரிகளோ ‘எம்பூட்டு அடிபட்டாலும் வலிக்காதாம் சீமானுக்கு! முன்னோட்டம்  முடிஞ்சுதாம், முக்கிய திரைப்படம் வருதாம்:    முடியலையேடா சாமீ!’ என்கிறார்கள்.