Asianet News Tamil

21 நாட்கள்.. ஏழைகளுக்கு பட்டினிச்சாவு தான் ..! மத்திய அரசை தாறுமாறாக விமர்சித்த சீமான்..!

மக்கள் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்து கொள்ள முடியாதவாறு திடீரென்று ஒரே இரவில் முன்பு பணமதிப்பிழப்பை அறிவித்தது போல, தற்போது இரவு 8 மணிக்கு மேலறிவித்து இரவு 12 மணியிலிருந்து ஊரடங்கு நாடு முழுவதும் கிராமம் கிராமமாக அமல்படுத்தப்படும் என்பது அதிர்ச்சிக்குரியதென்றாலும் அதனைச் சமாளிக்கும் எந்தவொரு சிறப்புப்பொருளாதார உதவி திட்டங்களையும் அறிவிக்காமல் பிரதமர் தன்னுடையப் பேச்சை முடித்துக்கொண்டது கடும் கண்டனத்திற்குரியது.

seemans statement about 21 days 144 act in india
Author
Salem, First Published Mar 26, 2020, 7:46 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கொரோனா தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவால் ஏழை மக்கள் பாதிப்படைவார்கள் என்றும் அவர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உலக அளவில் வேகமாக பரவிவரும் கொரோனா நுண்ணுயிரிப் பரவல் தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் முதல் இரு நிலைகளைத் தாண்டி மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை எது நடந்துவிடக்கூடாது என்ற அச்சப்பட்டமோ அந்த 'சமூகப் பரவல்' தொடங்கி இப்போது இந்திய துணைக்கண்டம் முழுவதும் கொரோனோ நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

ஒவ்வொரு நாளும் மத்திய, மாநில அரசாங்கத்தால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிக்கையிலுள்ள புள்ளி விபரங்களே சமூகப் பரவல் நாடு முழுமையும் தொடங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது. இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில் நேற்றிரவு நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி நோய்த்தொற்று அதிகமானால் சமாளிக்கும் திறன் இந்தியாவிடமில்லை என்பதை ஒப்புக்கொண்டு சமூகப்பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அடுத்து வரும் 21 நாட்களுக்கு நாடு முழுமைக்கும் வரலாறு காணாத ஊரடங்கு உத்தரவுக்கான அறிவிப்பை வெளியிட்டார். காலம் தாழ்த்தி பிறப்பித்திருந்தாலும் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு யாரும் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாதபடி தடை உத்தரவை வெளியிட்டது மிகச்சரியான நடவடிக்கைதான். ஆனால், இந்த 21 நாட்களுக்கும் நாட்டிலுள்ள வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்கள், அன்றாடம் தினக்கூலி வேலைக்குச் செல்லும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு குறு தொழில் முனைவோர்கள், வீடுகளற்று வீதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியவர்கள், மனநலம் குன்றியவர்கள், வாழ வழியின்றி பிச்சை எடுத்து உண்ணும் லட்சக்கணக்கானோர் உள்ளிட்ட பல கோடிக்கணக்கான ஏழை , எளிய மக்கள் வாழும் நாட்டில் அவர்களின் தினசரி உணவு மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகளை வழங்குவது குறித்தோ அல்லது அதை வாங்குவதற்குத் தேவையான நிதியை வழங்குவது குறித்தோ தனது அறிவிப்பில் எதுவும் பிரதமர் வெளியிடாதது மிகுந்த ஏமாற்றத்திற்குரியது.

மக்கள் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்து கொள்ள முடியாதவாறு திடீரென்று ஒரே இரவில் முன்பு பணமதிப்பிழப்பை அறிவித்தது போல, தற்போது இரவு 8 மணிக்கு மேலறிவித்து இரவு 12 மணியிலிருந்து ஊரடங்கு நாடு முழுவதும் கிராமம் கிராமமாக அமல்படுத்தப்படும் என்பது அதிர்ச்சிக்குரியதென்றாலும் அதனைச் சமாளிக்கும் எந்தவொரு சிறப்புப்பொருளாதார உதவி திட்டங்களையும் அறிவிக்காமல் பிரதமர் தன்னுடையப் பேச்சை முடித்துக்கொண்டது கடும் கண்டனத்திற்குரியது. வாழ்வாதாரத்தைப் பேணுவதற்கு எவ்விதத் திட்டத்தையும் முன்வைக்காது வெறுமனே ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும். ஏற்கனவே தமிழகம், கேரளம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் மாநில அரசுகள் தானாக முன்வந்து எடுத்த ஒரு வாரகால ஊரடங்கு உத்தரவுக்கே போதுமான அளவு இல்லையென்றாலும் குறைந்தபட்ச நிதியையும், அத்தியாவசியபொருட்கள் இலவசமாக வழங்குவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டன. அதைத்தொடர்ந்து நேற்று நண்பகலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே ஏழைமக்களுக்கான நிதியுதவி திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்த்து அதில் வரிகள் மற்றும் வங்கிகள் பற்றிய அறிவிப்புகளை மட்டும் இருப்பதைக் கண்டு பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில் இரவு பிரதமரின் அறிவிப்பும் ஊரடங்கை மூன்று வாரங்களாக நீட்டித்ததோடு கிருமி தொற்றைச் சமாளிக்க அரசு ரூ 15,000 கோடி ஒதுக்கியுள்ளதாக மட்டும் அறிவித்துவிட்டு பொருளாதார உதவிகள் பற்றி ஏதுமின்றி முடிவடைந்து மக்களின் இறுதி நம்பிக்கையும் தகர்க்கப்பட்டுள்ளது.

3.45 கோடி மக்கள் கொண்ட சிறிய மாநிலமான கேரளா இதே கொரோனா நோய் தொற்றைச் சமாளிக்க ரூ 20,000 கோடி ஒதுக்கியுள்ள நிலையில் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா ஒன்றியத்துக்கு வெறும் ரூ 15,000 கோடிகள் எப்படிப் போதுமானதாக இருக்கும்? தற்பொழுது ஒதுக்கியுள்ள ரூ 15000 கோடி என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சராசரியாக ரூ 112/- தான். கொரோனா சோதனை செய்யவே ரூ 4,500 செலவு செய்யவேண்டிய நிலையில் ரூ 112 வைத்துக்கொண்டு குடிமக்கள் என்ன செய்வார்கள்? 2019-ம் ஆண்டு அனைத்து பொருளாதார வல்லுனர்களின் எச்சரிக்கையும் மீறி மத்திய ரிசர்வ் வங்கியின் நிச்சயின்மை நிதியிலிருந்து ரூ 1.76 லட்சம் கோடிகளை எடுத்து பெரும் முதலாளிகளுக்கும் கார்ப்பரேட் வணிக நிறுவனங்களுக்கும் வரிச்சலுகையாக ரூ 1.52 லட்சம் கோடிகளை வாரி இறைத்த இந்த அரசு, கடந்த ஆறு வருடங்களில் கடன் சலுகைகள், வரிச்சலுகை என்று மட்டும் பெரும் வணிக நிறுவனங்களுக்குச் சுமார் 7.78 இலட்சம் கோடிகளை வாரியிறைத்து இந்த அரசு கொரோனா என்ற கொடியக் கிருமியை ஒழிக்க வெறும் ரூ 15,000 கோடிகளை ஒதுக்கியது ஏன்? ஏற்கனவே பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட தவறானப் பொருளாதாரக் கொள்கைகளால் தொழில் முடக்கம், வேலையிழப்பு, பொருளாதார மந்தம் ஆகியவற்றால் கேள்விக்குறியான நாட்டு மக்களின் எதிர்காலம் தற்போது கொரொனா நோய்த்தொற்றுக் காரணமாக ஏற்பட்டுள்ள முடக்கத்தால் மேலும் இருளத் தொடங்கியுள்ளது என்பதே நிதர்சனம்.

மாநிலங்களின் சுயாட்சி உரிமைக் குரல்கள் எழுந்த போதெல்லாம் அதனைக் கண்டுகொள்ளாது காலில் போட்டு மிதித்துவிட்டு , ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகள் மூலம் மாநிலங்களின் பெரும்பான்மையான நிதியாதாரங்களைப் பறித்துக் கொண்ட மத்திய பாஜக அரசு, தற்போது இந்தப் பேரிடர் காலச் சுகாதார முன்னெடுப்புகளுக்கான நடவடிக்கைகளை மட்டும் முழுக்க முழுக்க மாநில அரசின் மீது சுமத்திவிட்டு தமது பொறுப்பிலிருந்து நழுவுவது என்பது ஏற்புடையதல்ல. இப்பேரிடர் காலத்தில் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியுதவி செய்து, காக்காவிட்டால் அது பெரும் உள்நாட்டுக் கலவரத்திற்கு வழிவகுக்கும் ஆபத்துண்டு. இந்திய பெருநாட்டின் 130 கோடிக்கும் மேலான மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் பாதுகாப்பான உணவோ, உறைவிடமோ இல்லாத எளிய மக்கள். இந்த ஊரடங்கு மூன்று வாரங்களோடு முடியுமா அல்லது மேலும் தொடருமா என்ற அச்சமும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. எனவே, இந்த மிக நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டு மக்கள் நோய்த்தொற்றிலிருந்து தப்பித்து வறுமையில் சிக்கி உயிரிழந்திடா வண்ணம் காக்கும் பொருட்டு மக்களுக்கு உயிர்வாழத் தேவையான அன்றாட அத்தியாவசிய உதவிகளை உடனடியாக வழங்கிடவும், உறைவிடமற்ற மக்களுக்குச் சுகாதாரமான தற்காலிக முகாம்கள் அமைத்து பாதுகாத்து நோய்ப்பரவல் மேலும் தொற்றாமல் தடுத்திடவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios