Asianet News TamilAsianet News Tamil

ஈழத்தமிழர்களே... துரோகிகளை நம்பி மோசம் போயிடாதீங்க... இலங்கை தேர்தலிலும் சீமான் வாய்ஸ்..!

மீண்டும் மீண்டும் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா போன்ற துரோகிகளையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் வாக்கு செலுத்தி வெல்ல வைப்பதென்பது நாம் துரோகத்திற்குத் துணைபோனதாக ஆகிவிடும். 

Seeman voice in the Sri Lankan election too
Author
Tamil Nadu, First Published Aug 1, 2020, 11:16 AM IST

இலங்கையில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஈழத் தமிழர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார். 

அதில், ’’ஈழத்தாயகத்தில் வாழும் என்னுயிர் உறவுகளுக்கு... வணக்கம்! இந்த உலகில் வாழ்கின்ற எல்லாத் தேசிய இன மக்களையும் போல எல்லா வித உரிமைகளையும் கொண்ட ஒரு சுதந்திர வாழ்வினை வேண்டித்தான் எழுபது ஆண்டுகளாக நம் தாய்மண்ணின் விடுதலைக்காக நாம் போராடி வருகிறோம். ஆனால் சிங்களவர்கள் நமக்கான உரிமைகளை மறுத்ததோடு மட்டுமல்லாமல், நாம் இந்த நிலத்தில் வாழ்ந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்துதான் நம்மை அழித்தொழிக்கும் வேலையைத் தொடங்கினார்கள். பத்தாண்டுகளுக்கு முன்னால் சிங்களப் பேரினவாத அரசும் உலக வல்லாதிக்க நாடுகளும் சேர்ந்து இதுவரை இந்த உலகம் கண்டிராத இனப்படுகொலையை நிகழ்த்தி நமது விடுதலைப் போராட்டத்தை அழித்து முடித்தார்கள். எக்காலத்திலும் தமிழர்கள்‌ மறக்க முடியாத மாபெரும் துயர வடுவாக நம் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை நம் மனதில் பெரும் வலியாக இருந்து வருகிறது.

Seeman voice in the Sri Lankan election too

நமக்கென்று உள்ளங்கை அளவிற்கு ஒரு நிலம் இருந்தால் கூட அது அனைத்து விதமான உரிமைகளுடன் கூடிய இறையாண்மைமிக்க நிலமாக இருக்க வேண்டும் என்றுதான், நமக்காகப் போராடி தன்னுயிரை ஈந்து இந்த மண்ணில் விதையாக விழுந்த மாவீரர்கள் சிந்தித்தார்கள். தமிழருக்கென்று தனித்த இறையாண்மையுடன் கூடிய சுதந்திர தேசம் வேண்டும் என்பதே பல்லாயிரம் ஆண்டுகால நமது இனத்தின் பெருங்கனவு என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அதற்கான போராட்டத்தைதான் அந்த நிலத்தில் நமது முன்னவர்கள் முன்னெடுத்தார்கள். அந்தப் போராட்டம் சனநாயக வழியில் நிகழ்ந்தபோதும், ஆயுத வழியில் நடந்தபோதும் நமது இலக்கு நமது இனத்தின் விடுதலையாக, தாய் நிலத்தின் விடுதலையாக இருந்து வந்திருக்கிறது.

நமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு அங்கமாகத்தான் இலங்கையில் நடைபெறக்கூடிய தேர்தலில் கூட கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் நாம் உறுதியான நிலைப்பாடுகளை எடுத்து வருகிறோம். இலங்கை பாராளுமன்றத்திற்குள் போய் இதுவரை தமிழ் மக்களுக்கு எதுவொன்றும் நடக்கவில்லை என்பது கண்கூடாக இருந்தாலும் தவிர்க்க முடியாத சூழலில் அங்கே இருந்து குரலெழுப்ப வேண்டிய தேவை நமக்கிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பது, வெல்வது மட்டுமே நமது இலக்கு அல்ல. நாடாளுமன்றம் போய்ப் பேசுகிற ஒரு வாய்ப்பை, வெறுமனே ஒரு அங்கீகாரத்தைப் பெறுவதுமல்ல. தமிழர்களுக்கென்று தனித்த நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டுமென்பதே தாயக விடுதலைக்காகப் போராடிய நம் முன்னவர்களின் நோக்கம். அந்த இலட்சிய இலக்கிற்காகதான் இந்த உலகம் இதுவரை பார்த்திராத ஈகங்களை நம் உடன்பிறந்தோர் செய்தார்கள். ஈடுசெய்ய முடியாத இழப்புகள் நமக்கு ஏற்பட்ட பிறகும் சொந்த மண்ணிலேயே அனைத்துவிதமான உரிமைகளும் மறுக்கப்பட்ட இரண்டாந்தரக் குடிமக்களாக நாம் வாழ்ந்து வருகிறோம்.

Seeman voice in the Sri Lankan election too

நமது விடுதலைப் போராட்டம் உலக வல்லாதிக்கங்களின் துணையோடு முறியடிக்கப்பட்டதற்குப் பிந்தைய காலகட்டமான தற்போதைய சூழலில் நம் மக்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால நலன்களைப் பற்றி நன்கு சிந்தித்து இலங்கையில் நடைபெற இருக்கின்ற தேர்தலில் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்கிற முடிவை நாம் எடுக்க வேண்டும். நம்முடைய மாவீரர்கள், நம்முடைய உறவுகள், தூக்கிச் சுமந்துவந்த அந்தப் புனிதக்கனவை நிறைவேற்றுவதற்கான எதிர்கால அரசியல் வடிவமாக, அதற்குத் தேவையான வலிமையைப் பெறுவதற்கான அடித்தளமாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமையும்படி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் வரலாறு நம்மிடம் கையளித்திருக்கிற கடமை என்பதை உணர்ந்துகொண்டு நம் மக்கள் இந்தத் தேர்தலை அணுக வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது.

போராட்டத்திற்காகப் பிள்ளைகளைக் கொடுத்த பெற்றோர்களின் மனநிலையிலிருந்து, இன்றைக்கும் தமது உறவுகளைப் பறிகொடுத்துவிட்டு தேடி அலையும் மக்களின் நிலையிலிருந்து, ஏதிலிகளாக ஏதோ ஒரு நாட்டில் அலையும் நம்முடைய உறவுகளின் நிலையிலிருந்து நீங்கள் சிந்தித்துப் பார்த்து இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். நமது விடுதலைப் போராட்டம் இன்னும் முடியவில்லை என்ற நினைவோடு, எழுபது ஆண்டுகால நமது விடுதலை போராட்டத்தின் நீட்சியாகத்தான் இந்தத் தேர்தலை நாம் எதிர்கொள்ள வேண்டும். வாக்கு செலுத்த விரலில் “மை” துளியை வைக்கும்பொழுது, நமக்காகத் தம் இன்னுயிரை இழந்து, மாவீரர்கள் சிந்திய ஒவ்வொரு இரத்தத்துளிகளையும் எண்ணிப் பார்த்துதான் நீங்கள் முடிவெடுக்க வேண்டும்.

Seeman voice in the Sri Lankan election too

ஆயுதப் போராட்ட வடிவம் நிறுத்தப்பட்ட சூழலில் நமக்கு இருக்கிற கடைசி வாய்ப்பு அரசியல் விடுதலைதான். அந்த அரசியல் விடுதலையை உறுதியாக முன்னெடுப்பவர்கள் யார் என்பதைச் சிந்தித்துப் பார்த்து நீங்கள் ஒரு வாய்ப்பை வழங்குங்கள். கடந்த காலங்களில் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு, பெளத்த பேரினவாதத்திற்குத் துணை போனவர்களையும், இன்றும் துணை நிற்பவர்களையும் புறந்தள்ளுங்கள். இறுதிப்போருக்கு பிறகு, ஈழ மண்ணின் உரிமைகள் பறிபோகும்போது கைகட்டி வேடிக்கை பார்த்த துரோகிகளை ஆதரிப்பதைக் கைவிடுங்கள். சிங்கள அரசின் சலுகைகளுக்கு உடன்பட்டு நம் தாய் மண்ணின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து அழித்து முடிக்கத் துணைபோனவர்களை ஒருபோதும் ஆதரிக்காதீர்கள்.

தாய்மண்ணின் உரிமைகளுக்காக, இனப்படுகொலை காலத்தின்போது காணாமற்போன நம் உறவுகளை மீட்டெடுக்க சிங்கள பேரினவாத அரசை எதிர்த்து குரல் கொடுத்தவர்களுக்காக உங்கள் விரல் நீளட்டும். ஒற்றையாட்சியை ஏற்காமல், வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழர் தாயகமாக அறிவிக்க யார் முயல்கிறார்களோ, தன்னாட்சி உரிமைக்காக யார் அயராது, பின்வாங்காது உறுதியாக நிற்கிறார்களோ, நம் தாய் நிலத்தில் சிங்களப் பேரினவாத அரசால் நடந்த இனப்படுகொலை குறித்துத் தலையீடற்ற பன்னாட்டு விசாரணைக்காக யார் இன்றுவரை குரல் கொடுக்கிறார்களோ, தாயக விடுதலைப் பெறுவதற்கான பொதுவாக்கெடுப்பு யார் கோருகிறார்களோ அவர்களுக்குதான் உங்களுடைய வாக்கு செலுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

மீண்டும் மீண்டும் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா போன்ற துரோகிகளையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் வாக்கு செலுத்தி வெல்ல வைப்பதென்பது நாம் துரோகத்திற்குத் துணைபோனதாக ஆகிவிடும். அவர்கள் செய்த துரோகத்தைச் சரியென்று நாமே அங்கீகரிப்பதுபோல் ஆகிவிடும். அதை ஒருபோதும் எம்மின சொந்தங்கள் செய்யமாட்டீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குண்டு.Seeman voice in the Sri Lankan election too

மேலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நம் தலைவரால் தொடங்கப்பட்டது என்றெண்ணி, அவர்கள் ஒருபோதும் தங்கள் இலட்சியப் பாதையில் இருந்து விலகமாட்டார்கள் என நம்பி, அவர்கள் எது செய்தாலும் ஆதரித்துச் செயல்பட்டதன் விளைவுதான் இவ்வளவு பெரிய பின்னடைவு ஈழ நிலத்திற்கு வந்துள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். தகப்பனுடைய துப்பாக்கியே என்றாலும் நம்மைச் சுடுமாயின் மரணம் நிகழும். அதனால் நம் தலைவரால் தொடங்கப்பட்டிருந்தாலும், இன்று அது எந்தப் பாதையில் பயணிக்கிறது, எந்தக் கருத்தை முன் வைக்கிறது, அதில் உள்ளவர்கள் இன்று எந்த நோக்கில் செயல்படுகிறார்கள் என்பதைப் பார்த்துதான் நாம் கூட்டமைப்பை பின் தொடர்வதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை முடிவுசெய்ய வேண்டும். சிங்களவருடன் இணைந்து பணியாற்றிய சுமந்திரனால் இதுவரை ஈழமண்ணில் நடந்த நன்மை என்ன? என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

நமது வாழ்விடங்கள் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது; நமது நிலப்பரப்பில் சிங்கள குடியேற்றங்கள் திட்டமிட்டு நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது; நம்முடைய வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டுப் பெளத்த விகார்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. காணி உரிமை, காவல்துறை உரிமை உள்ளிட்ட நம்முடைய அடிப்படை உரிமைகள் கூட அறவே மறுக்கப்பட்டுள்ளது. நமது தாய்நிலம் முழுக்க முழுக்க இராணுவமயப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இழிநிலையிலிருந்து நம்மை மீட்க யாருமில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. எனவே நம்மை நாமேதான் வலிமையாக்கி கொண்டு போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு இந்தத் தேர்தலை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

எந்த அடிப்படை உரிமைகளைக் கேட்டு முதன்முதலில் அரசியல் போராட்டத்தைத் தொடங்கினோமோ, அதே உரிமைகளைக் கேட்டும் கிடைக்கப் பெறாத நிலையில்தான் இன்றும் உள்ளோம். தொடங்கிய புள்ளியிலேயே மீண்டும் நிற்கும் அவலநிலையில் நாம் இருக்கிறோம். ஆயுதப் போராட்டம் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் நம்முடைய நீண்டகாலப் பெருங்கனவான தாயக விடுதலை என்கிற மகத்தான இலட்சியக் கனவு மறைந்துவிட்டது, அது முடிந்துவிட்டது என்று உலகம் எண்ணிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், நம்மிடம் மீதம் இருப்பது அரசியல் போராட்டம் என்பதனை எமது மக்கள் மிகச்சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இலக்கை நோக்கிய சமரசமற்ற அரசியல் போராட்டத்திற்குச் சரியான தலைமை யாரென்பதை நீங்கள் உணர்ந்து, தெளிந்து தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்தத் தலைமுறைக்கு இந்தப் போராட்டத்தை எடுத்துச் செல்லும்போது நமது இனத்தின் உரிமைக்கு, நமது தாயக விடுதலைக்குச் சமரசமின்றிக் குரல் எழுப்பக் கூடிய தலைமை யாரோ, அவர் முன்னிறுத்துகிற வேட்பாளர்கள் எவரோ அவர்களைக் கண்டறிந்து நீங்கள் உங்களுடைய வாக்கினை செலுத்த வேண்டும். இதில் தனிப்பட்ட முறையில் எமக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று எவருமில்லை. எவர் தமிழரின் உரிமைப் போராட்டத்தின் பக்கம், தேசியத்தின் பக்கம் உறுதியாக நிற்கிறாரோ அவர்தான் நமக்குரியவர், நமக்கு வேண்டியவர். நம் பக்கம் நிற்காது எதிரிக்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ துணை போகிற எவரும் நமக்கும் வேண்டாதவர். அந்த நிலைப்பாட்டை உணர்ந்து நீங்களே தெரிந்து, தெளிந்து முடிவெடுங்கள்.

Seeman voice in the Sri Lankan election too

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று என் மக்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால் இந்த நிலத்தில் நிற்கிற என்னைப்போன்ற தாயக தமிழர்களை விட, ஈழத்தாயகத்தில் வாழும் உறவுகளான நீங்கள் சுமந்து நிற்கும் காயங்களும், வலிகளும் மிக அதிகம். அந்த வலியிலிருந்து உணர்ந்து, சிந்தித்து நீங்கள் இந்தத் தேர்தலை எதிர்கொள்வீர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற நம் இலட்சிய முழக்கம் இன்று “தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்” என்று அரசியல்தளமாக மாறியிருக்கும் இவ்வேளையில் தகுதியான வேட்பாளர்களைத் தெரிவுசெய்து சரியான முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள் என்று அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது. இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios