ஒரு ஆண்டாக ஆட்சி செய்ததே முதல்வர் பழனிசாமி அரசின் பெரிய சாதனைதான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் பல சம்பவங்கள் அரங்கேறின. பல்வேறு விவகாரங்கள், பிரச்னைகள், அணி தாவல்கள் ஆகியவற்றை கடந்து, கடந்த ஓராண்டாக முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், தினகரன் ஆகியோர், பழனிசாமி அரசுக்கு அவ்வப்போது கெடு விதித்துக்கொண்டே இருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து, முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஓராண்டை நிறைவு செய்தது. ஓராண்டை கடந்தும் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.

பழனிசாமி அரசின் ஓராண்டு சாதனைகள் எல்லாம் பட்டியலிடப்படுகின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சீமான், ஓராண்டாக ஆட்சி செய்து கொண்டிருப்பதே பழனிசாமி அரசின் சாதனைதான் என கிண்டலாக விமர்சித்தார்.