Asianet News TamilAsianet News Tamil

நம்மை ஆள்வது 23_ம் புலிகேசியை விட மோசமான கூட்டம்: சிரித்து சின்னாபின்னமான சீமான். 

seeman speech against about tamilnadu ministers speech
seeman speech against about tamilnadu ministers speech
Author
First Published Sep 25, 2017, 6:30 PM IST


நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், மேடைகளில் அனல் பறக்க பேசுவதை பார்த்திருக்கிறோம், கொட்டும் மழையிலும் தீப்பிழம்பாய் நின்று கொதித்ததைப் பார்த்திருக்கிறோம், தமிழர்களின் இழி நிலையை சொல்லி கண்ணீர் விட்டதையும் பார்த்திருப்போம்! ஆனால் அவர், ‘ஹய்யோ! ஹய்யோ!’ என்று முகத்தைப் பொத்திக் கொண்டு சிரித்த பொதுமேடையை கண்டிருக்கிறீர்களா?

அவரை அந்தளவுக்கு சிரிக்க வைத்த பெருமை தமிழக அமைச்சர்களையே சேரும். சென்னையில் ஈஷா நிறுவன ஜக்கி வாசுதேவ் நடத்திய நிகழ்வில் கலந்து கொண்ட திண்டுக்கல் சீனிவாசனும், செங்கோட்டையனும் மேடை வி.ஐ.பி.க்களின் பெயர், அவர்கள் மிளிரும் துறை ஆகியவற்றை அறியாமல், கையிலிருக்கும் அழைப்பிதழை சரியாக வாசிக்காமல் உளறிக் கொட்டி அசிங்கப்படுத்தியதை அப்படியே நடித்துக் காட்டி சீமான் குலுங்கிச் சிரித்ததோடு, இந்த மாநிலத்தின் கேடு கெட்ட நிலையையும் சொல்லி வருந்திய காணொலி கடந்த சில நாட்களாக சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. 

வெறும் ஹாஸ்யமாக மட்டும் பேசாமல் பேச்சுவாக்கில்  ’அம்மாவும் 48 திருடர்களும் அன்னைக்கு இருந்தாங்க!’ என்று சொல்லி ஜெயலலிதாவையும் போட்டுத்தாக்கவும் தயங்கவில்லை. ’23_ம் புலிகேசியை விட மோசமான கூட்டம் நம்மை ஆண்டுகிட்டு இருக்குது.’ என்று பொடனியில் அடிக்கவும் தவறவில்லை. 

சீமானின் இந்த வெடிச்சிரிப்பு பேச்சை மேடையில் அமர்ந்திருக்கும் பேச்சாளர்களான நடிகை கஸ்தூரி, கவிஞர் சல்மா, அறிவியலாளர் பொன்ராஜ் ஆகியோர் சிரித்துச் சிதறி ரசிக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் தமிழகத்தின் இழிநிலையை சீமான் வருந்த சொல்லும் போது கஸ்தூரி இயலாமையின் வெளிப்பாட்டில் முகம் வெடிக்கிறார், கண்கள் முட்டுகின்றன. 

மிக முக்கியமான வீடியோ பதிவு இது. ’இதெல்லாம் அரசியலில் சாதாரணமப்பா’ என்று தாங்கள் செய்யும் செயல்களால் தங்கள் மேல் வீசப்படும் எல்லா அவமான விமர்சனங்களையும் துடைத்து எறிந்துவிட்டுதான் ஓடிக் கொண்டிருக்கிறது இந்த ஆட்சி. ஆனாலும் சில வருடங்கள் கழித்து இந்த வீடியோவை ரீ பிளே செய்து பார்த்தால் திண்டுக்கல் சீனிவாசனும், செங்கோட்டையனும் நிச்சயம் தங்களை நினைத்து வருந்துவார்கள்.

இப்படியொரு கூட்டத்தினை வழி நடத்தினோமே! என்று எடப்பாடியும் வருந்தத்தான் வேண்டும். 
அவ்வளவு காரமான விமர்சனத்தை மத்தாப்பு சிரிப்பை தூவி கொடுக்கிறார் சீமான். அதை ஹைலைட் பாயிண்டுகள் இதோ!....

*    நாட்டுல எவ்வளவோ பிரச்னையிருக்குது, தெருவெங்கும் போராட்டம் இருக்குது. ஆனா இங்க தெருவுக்கு தெரு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்குது அரசு காசுல.
*    எம்.ஜி.ஆரையே பார்த்ததில்ல இவங்க எந்தப்பயலும், எம்.ஜி.ஆர். யார்? அப்படின்னு படிக்கிறதுமில்லை.
*    சுதா ரகுநாதன் அப்படிங்கிற பெயரை கூட சொல்ல தெரியலைய்யா நம்ம அமைச்சர்களுக்கு. 
*    சுதா ரங்கராஜன் அவர்களே...அப்படிங்கிறாரு ஒருத்தரு. இந்த கொடுமையை பார்த்துட்டு அந்தம்மா உயிரோட இருக்கிறாங்களான்னு போயி பார்க்கணும். இவங்களெல்லாம் ஆளுற நாட்டுல உயிரோட இருக்கணும்மான்னு வேற நாட்டுக்கு ஏதும் போயிருக்க  போறாங்க. 
*    அதுலேயும் அந்த பெரும்புலவர் திண்டுக்கல் சீனிவாசம் அந்தம்மாவ பார்த்து ‘ஏங்க உங்க பேரென்ன சுதா ரங்கநாதனா? நீங்க என்ன கதகளியா, ஆங் பரதநாட்டியம் இல்லம்மா! பரதநாட்டியம்.
*    வெளிநாட்டுக்கு போயி தமிழ்நாட்டுல இருந்து வர்றேன்னு சொல்லிடாத யாரும். கேவலப்படுத்தி காரி துப்பிடுவாங்க. 
*    அதிலேயும் முதலமைச்சர் எடப்பாடி சொல்றாரு ‘தேடித்தேடி பார்த்தாலும் எங்கள் ஆட்சியில் ஒரு குறை  கூட சொல்ல முடியாது.’ அப்படின்னு. அதுக்கு ஒரு தம்பி இணையத்துல பதில் போடுறான் ‘அட, உங்க ஆட்சியதான் தேடித்தேடி பார்த்துட்டிருக்கோம். ஆட்சியையே காணோமே!’ன்னு 
...இப்படி இன்னும் பல. 

தவறாமல் வீடியோவை பாருங்கள்! இந்த ஆட்சியின் அவல நிலை சீமானின் வார்த்தைகள் வழியே விளங்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios