நாங்குநேரி, விக்கிரவாண்டி  இடைத்தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. அதிமுக - திமுகவுக்கு மத்தியில்  நாம் தமிழர் கட்சி மக்களிடம் செல்வாக்கு பெற, இந்த இடைத்தேர்தலை ஒரு வாய்ப்பாகக் கருதுகிறது.

 

அதேவேளை இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைகளை கச்சை கட்டி அரங்கேற்றி வருகிறார் சீமான். விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காந்தியை சுட்டது கோட்சே. அவரது செயல் சரிதான். அதே போலவே ராஜீவ் காந்தியை கொன்றோம். அமைதி படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, என் இன மக்களை கொன்று குவித்தனர். என் இனத்தின் எதிரியான ராஜீவ் காந்தியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதப்படும்.

ஓட்டிற்காக எதையும் மறைத்து பேசும் ஆள் கிடையாது. போட்டா போடுங்கள். இல்லையென்றால் போங்கள். எனக்கு ஒரு இழப்பும் கிடையாது என்று கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக சீமான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வந்த சீமான், ‘’அலிபாபாவும் 40 திருடர்கள் போல் அம்மாவும் 40 திருடர்களும் உள்ளனர். என்ன? அம்மா இப்போது இல்லை. திருடர்கள் தான் இருக்கின்றனர்’’ எனக்கூறினார். இந்தப்பேச்சு அதிமுக தரப்புக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.