எம்.எல்.ஏ.க்களை தங்க வைத்து அரசியல் வணிகம்... பாஜகவை விளாசிய சீமான்!!
அசாம் மாநிலத்தில், சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்க வைத்து அரசியல் வணிகம் செய்வது கடும் கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில், சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்க வைத்து அரசியல் வணிகம் செய்வது கடும் கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அசாம் மாநிலத்தில் பெய்த அதிகப்படியான மழைப்பொழிவால் 30 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளம் காரணமாக, 45 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு, 80க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து, அம்மாநிலமே பேரிடரில் சிக்கித் தவிக்கிற சூழலில், சிவசேனா கட்சியைச் சேர்ந்த மராட்டிய மாநில சட்டமன்ற உறுப்பினர்களை அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் தங்க வைத்து ஆட்சிக்கலைப்புக்கான முன்னெடுப்புகளைச் செய்து வரும் பாஜக ஆட்சியாளர்களின் கொடுங்கோல் செயல்பாடுகள் வெட்கக்கேடானவையாகும்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம்பேசி தன் பக்கம் ஈர்ப்பதும், மாநில அமைச்சரவையைச் சீர்குலைத்து, தனது அதிகார வலிமையைக் கொண்டு கலைப்பதும், மாநிலக் கட்சிகளைப் பிளவுப்படுத்தி, பலவினப்படுத்துவதுமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் பாஜகவின் எதேச்சதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. அதுவும் வெள்ளத்தாலும், பேரழிவாலும் பாதிக்கப்பட்டு நிற்கிற அசாம் மாநிலத்தில் இத்தகையக் கேலிக்கூத்துகளை அரங்கேற்றுவது துளியும் மக்கள் நலனற்ற கொடுங்கோல்தனத்தின் உச்சமாகும்.
மானுடக் கூட்டம் வெள்ளப் பேரழிவில் சிக்கி, அன்றாடத் தேவைகளுக்கும், அத்தியாவசிய இருப்புகளுக்குமாக வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் துயர்நிறைந்த அசாம் மாநிலத்தில், சிவசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்க வைத்து, அவர்களைக் கண்காணித்து வரும் பாஜகவின் தலைவர் பெருமக்கள் தங்களது அதிகாரப்பரவலாக்கலுக்கான இலாப நட்டக் கணக்கீடுகளையும், பதவிப் பேரங்களையும், அரசியல் வணிகங்களையும் கொஞ்சமும் நாணமின்றி செய்து வருவது ஏற்கவே முடியாத மிக இழிவான அரசியலாகும். மனிதர்களைச் சாகடித்து, மதத்தை வளர்ப்பதும், குடிகளைப் பாழ்படுத்தி ஆட்சியை நிறுவுவதுமான மாந்தநேயமற்ற இச்செயல்பாடுகளாலேயே, பாஜக எனும் அரசியல் இயக்கத்தையும், அதன் இந்துத்துவக் கோட்பாட்டையும் மானுட விரோதிகளென எச்சரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.