புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பிரவீணா மதியழகனை ஆதரித்து  சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ’’இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த 3 ஆண்டு காலம்தான் இருண்ட காலம். வரலாற்றில் பெரும் கொடுமை செய்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். ராஜீவ் மரணத்தை காரணம் காட்டி மொத்த தமிழ் இனத்தையும் அழித்தவர்கள். இந்தியா விரும்பிய போரையே இலங்கை செய்தது என்று ராஜபக்சே தெரிவித்துள்ளார். முடிந்தது என நினைக்கிறார்கள். இனிதான் தொடக்கமே. தமிழின துரோகிகளை ஒழிக்காமல் ஓய மாட்டோம்.

மக்கள் பிரச்சினைக்காக போராடாத காங்கிரஸ் தற்போது நம்மை எதிர்த்து போராடுகிறது. இது மகிழ்ச்சியாகவே உள்ளது. பிரபாகரனை பயங்கரவாதி என கூறுகிறீர்கள். அவரே உலக தமிழ் பேரினத்தின் தலைவன் என நிரூபிப்போம். சிறை செல்வது எனக்கு புதிது அல்ல. 10 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளை பேசி பல முறை சிறை சென்ற எனக்கு புதிது அல்ல. ஊருக்கு என்று ஒரு பிரச்சினைக்கும் போராடாத காங்கிரஸ் கட்சி என்னை எதிர்த்து போராடுகிறது. நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. என்னை காங்கிரஸ்தான் பெரிய ஆளாக்கி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்து விட்டு எனக்கு எதிராக போராடுங்கள். நான் பேசியது வரலாறு. அதில் இருந்து நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். கைது செய்யும் போது அய்யோ... அம்மா... என கத்தும் கூட்டம் அல்ல நாங்கள். எங்களை கொன்று குவித்தவர்கள் தி.மு.க.வும், காங்கிரசும்தான். வேடிக்கை பார்த்தவர்கள் அ.தி.மு.க.வும், பா.ஜகவும்.

ஒரு இனமே கண்முன் அழியும் போது அதைப்பற்றி பேசாமல் எதை பேச முடியும். நாங்கள் ஓட்டு கேட்டு வரவில்லை. உரிமையை கேட்டுத்தான் வருகிறோம். எனக்கு பதவிக்கு வருவதோ... தேர்தல் வெற்றியோ தேவை இல்லை. 100 ஆண்டுகள் கட்சி நடத்துபவர்கள் பொதுக்கூட்டத்துக்கு ஆள் சேர்க்கவும் ஓட்டுக்கும் பணம் வழங்குகிறார்கள். நாங்கள் ஓட்டுக்கு பணம் வழங்க மாட்டோம். நாங்கள் பெற்றோருக்கும், உடன் பிறந்தவர்களுக்காகவும் உழைக்க வந்துள்ளோம். மக்கள் பிரச்சினைகளை கேட்க வரவில்லை. அவற்றை தீர்க்க வந்துள்ளோம். ஆனால், தரமான கல்வி, வேலை வாய்ப்பு, பாதுகாப்பான சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றை உருவாக்கி தருவோம்’’ என அவர் தெரிவித்தார்.