Asianet News TamilAsianet News Tamil

புனித வெள்ளி, ரம்ஜான் நாட்களில் டாஸ்மாக் கடையை மூடணும்.. ஸ்டாலின் அரசுக்கு சீமான் கோரிக்கை!

மகாவீரர் ஜெயந்திக்காக வெகுசன மக்களின் உணவு உரிமையான இறைச்சிக்கடைகளைக் கூட மூடும் திமுக அரசு, புனித வெள்ளிக்காக உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்? 

Seeman request to Stalin government
Author
First Published Apr 8, 2023, 3:25 PM IST | Last Updated Apr 8, 2023, 3:25 PM IST

மகாவீர் ஜெயந்திக்கு டாஸ்மாக் மற்றும் கறிக்கடைகளை மூடும் தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி நாளன்றும், ரம்ஜான் பெருநாளன்றும் மதுக்கடைகளை மூட உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என சீமான் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- துக்க நாளாகக் கடைப்பிடிக்கப்படும் புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கிறித்துவப் பெருமக்களின் நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் உள்ள சமணர்களின் திருவிழாவான மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளையும், இறைச்சிக் கடைகளையும் மூட உத்தரவிடும் தமிழ்நாடு அரசு, அவர்களைவிடவும் பெரும்பான்மையாக தமிழ்நாட்டில் வாழ்கின்ற கிறித்துவப் பெருமக்களின் கோரிக்கைக்குச் சிறிதும் மதிப்பளிக்காது, அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது.

Seeman request to Stalin government

மகாவீரர் ஜெயந்திக்காக வெகுசன மக்களின் உணவு உரிமையான இறைச்சிக்கடைகளைக் கூட மூடும் திமுக அரசு, புனித வெள்ளிக்காக உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்? அரசின் வருமானம் ஒருநாள் தடைபடுவதைத் தவிர, மதுக்கடைகளை மூடுவதால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது?

Seeman request to Stalin government

இசுலாமிய பெருமக்கள் நீர் கூட அருந்தாமல் இறைவனை எண்ணி 30 நாட்கள் நோன்பிருந்து கொண்டாடும் ஈகைப் பெருநாளான ரம்ஜான் அன்றாவது திமுக அரசு மதுக்கடைகளை மூடப்போகிறதா? அல்லது அன்றும் திறந்து வைக்குமா? எல்லோருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசு, குறிப்பிட்ட மக்களின் சமய உணர்வுகளுக்கு ஆதரவாகவும், குறிப்பிட்ட சமய மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் செயல்படுவது சிறிதும் அறமற்றச்செயலாகும். இதுதான் திமுக அரசு கடைபிடிக்கும் ‘திராவிட மாடல்’ மதச்சார்பின்மை கொள்கையா? என்ற கேள்வியும் எழுகிறது.

Seeman request to Stalin government

ஆகவே, திமுக அரசு இனிவரும் காலங்களிலாவது கிறித்துவப் பெருமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி நாளன்றும், இசுலாமியப் பெருமக்கள் கொண்டாடும் ரம்ஜான் பெருநாளன்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios