ரஜினி அரசியலுக்கு வருவதை கடுமையாக எதிர்ப்பவர்களில் ஒருவர் சீமான். அவர் தொடர்ச்சியாக ரஜினியின் அரசியல் பிரவேசத்தையும் அவரது அணுகுமுறையையும் விமர்சித்துவருகிறார்.

ரஜினியின் ஆன்மீக அரசியல் என்ற கருத்து மாபெரும் விவாதத்துக்கு உள்ளானதோடு, ரஜினிக்கு பின்னிருந்து பாஜக இயக்குகிறது என்ற விமர்சனத்தை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் ரஜினியின் அரசியலை எதிர்ப்பவர்கள் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் எம்ஜிஆர் சிலையை திறந்துவைத்து பேசிய ரஜினிகாந்த், நிறைய அரசியல் பேசினார். அப்போது, மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்ற கருத்தை முன்வைத்தார்.

ரஜினியின் இந்த கருத்தை சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பெற்றோர் பணம் கட்டி படிக்க அனுப்புகிறார்கள். எனவே மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டுமே தவிர அரசியலில் ஈடுபட வேண்டாம் என்கிறார். அரசியல் என்பது தனிப்பட்ட விஷயமல்ல. மாணவர்களும் அரசியலில் ஈடுபட வேண்டும். அரசியலில் ஈடுபட வேண்டாம் என சொல்லும் ரஜினி, பெற்றோர் கொடுக்கும் பணத்தில் தனது படத்தை பார்க்க வேண்டாம் சொல்ல வேண்டியதுதானே என விமர்சித்தார்.