குறைவான எம்பிக்களை கொண்டுள்ள சந்திரபாபு நாயுடுவால், மத்திய பாஜக அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியும்போது, 37 எம்பிக்களை கொண்ட அதிமுகவால் ஏன் முடியாது? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம், வரும் 29ம் தேதியுடன் நிறைவடைகிறது. காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையை உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடாமல், செயல் திட்டம் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அந்த பகுதியை சுட்டிக்காட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நிலைப்பாட்டை மத்திய அரசும் எடுத்துள்ளது. ஆனால், அந்த செயல் திட்டம் என்பது, நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பில் குறிப்பிட்ட மேலாண்மை வாரியம் தான் எனவும் அதனால் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு, அரசியல் கட்சிகள், விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், மத்திய அரசு சார்பில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் இந்த செயல்பாட்டிற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நாகர்கோவிலில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், காவிரி மேலாண்மை வாரியம் தமிழர்களுக்கு உயிர்; ஆனால் பாஜகவிற்கு அது அரசியல். நீதிமன்ற உத்தரவு காலம் முடிவதால் பாஜகவினர் மாறி மாறி கருத்து கூறி வருகின்றனர். காவிரி நதிநீர் பங்கீட்டு குழு என்று தற்போது கருத்து கூறும் தமிழிசை சௌந்தரராஜன், அனைத்து கட்சி கூட்டத்தில் ஏன் இந்த கருத்தை கூறவில்லை? என சீமான் கேள்வி எழுப்பினார்.

பாஜகவிற்கு கர்நாடகா தான் முதன்மையானதாக உள்ளது. குறைவான எம்பிக்களை கொண்டுள்ள சந்திரபாபு நாயுடுவால், மத்திய பாஜக அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியும்போது, 37 எம்பிக்களை கொண்ட அதிமுகவால் ஏன் முடியாது? எனவும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.