ஐதராபாத்தில் நடந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் நேற்று காலை ஐதரபாத்தில் உள்ள அப்பல்லோவில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரஜினிகாந்துக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்றும் ரத்த அழுத்த பிரச்னை மட்டும் இருப்பது தெரியவந்தது. ரஜினிகாந்த் நலம் பெறவேண்டி அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.


இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் டிஸ்சார்ஜ் எப்போது செய்யப்படுவார் என்பது நாளை முடிவு செய்யப்படும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “சிறந்த திரைக்கலைஞரான ஐயா ரஜினிகாந்த் உடல் நலிவுற்றுள்ள செய்தியறிந்து மிகவும் மனம் வருந்துகிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று மீண்டுவர உளமார வாழ்த்துகிறேன்” என அதில் சீமான் தெரிவித்துள்ளார்.