தமிழக அரசியலின் டிரெண்டிங் டயலாக் இப்போது ‘ஆமா! நாங்கதான் ராஜீவ்காந்தியைக் கொன்னோம்!’ என்று சீமான் பேசியதுதான். இதற்கு வலுவான எதிர்ப்புக் காட்டி வரும் காங்கிரஸையும் வெச்சு செஞ்சு விமர்சித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார் சீமான். இவரது இந்த திடீர் அதிரடியால்  கந்தலாகிக் கிடக்கிறது தமிழக அரசியல் வட்டாரம். 

இந்த நிலையில், சீமான் போல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது பொதுவாகவே பற்றுடைய தலைவர்கள் இந்த விவகாரத்தை எப்படிப் பார்க்கிறார்கள்? என்பது பற்றி அலசியபோது வந்து விழும் கருத்துக்களாவன..
“சீமானின் பேச்சு காங்கிரஸை பலவீனப்படுத்தக் கூடியது என்றாலும், பா.ஜ.க.வுக்கு மறைமுக ஆதரவு கொடுப்பது போல் ஆகிவிட்டது. ஆனால் ஒன்று, ஏழு பேரை விடுதலை செய்யக் கூடாது என்பதில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டும் ஒரே நிலைப்பாடை உடையவை.” என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். 
ம.தி.மு.க.வின் எம்.பி.யான கணேசமூத்தியோ “சீமானின் பேச்சின் மூலம் ஏழு பேர் விடுதலைக்கு பெரிய தீங்கு நேரும். அவர் என்னமோ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர் போல ‘ஆமா நாங்கள்தான் கொன்றோம்’ என்று பேசியிருக்கிறார். ஏழு பேர் விடுதலைக்கு மட்டுமில்லை, ஈழத்தை சேர்ந்த தமிழர்களுக்கும் இவரது பேச்சால் பாதிப்பு உருவாகும்.” என்கிறார். 

“தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக தேவையில்லாமல் பேசியிருக்கிறார் சீமான். உண்மை என்னவென்றால், தான் நேசிப்பதாக சீமான் சொல்லிக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளுளின் நலன்களுக்கே எதிராகத்தான் சீமான் பேசியிருக்கிறார்.” என்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா. 


”சீமான் ஒரு ஜோக்கர். அவரது பேச்சும் ஜோக்கர்தனமாகத்தான் இருக்கும். அவரது பேச்சை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். சீமானை பின்னாலிருந்து தூண்டிவிடுவது அரசாக இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் கைதட்டலுக்காகவே இது போல சீமான் பேசி வருகிறார். ஆனால் இவரது பேச்சாலெல்லாம் ஏழு பேர் விடுதலைக்கு எந்த பாதிப்பும் வராது! என்றுதான் நினைக்கிறேன்.” என்கிறார் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. 

போச்சுடா! ஒரு பேச்சுக்கு இப்படியொரு அக்கப்போரா?