முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை கேவலமாக பேசி சிக்கலில் மாட்டியுள்ளார் சீமான்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை நேற்றோடு முடிந்து இருக்கிறது. நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது பேசிய அவர், ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேர்தலில் போட்டியிடுகின்ற 60-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனியாக போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் பாஜக வந்துவிடும் என திமுகவினர் பிரசாரம் செய்துவருகின்றனர். இதுபோன்ற கருத்துகள், எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. அடிப்படை வசதிகளைக்கூட மாற்றித் தராத ஆட்சியாளர்களாக தற்போது இருக்கின்றனர். 

மாற்றம் வேண்டும் என்றால் நம்முடைய தம்பி, தங்கைகள் தயாராக இருக்க வேண்டும். பாஜக தனித்து நிற்கிறது. அப்படி இருக்கும் பொழுது நான் எப்படி பாஜக ‘பி’ டீம் ஆக இருப்பேன். நாங்கள் தொடர்ந்து தனித்து தான் போட்டியிடுகிறோம். நாங்கள் தோல்வியுற்றால் அது மக்கள் தோற்றதிற்கு சமம். சுவாசிக்க நல்ல காற்று, குடிக்க நல்ல தண்ணீர், நல்ல சுகாதார சூழல் என்று பல அடிப்படை வசதிகளை செய்வோம். 

வரும் 2024, 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். திமுக, அதிமுக கட்சிகளுக்கே மாற்றி மாற்றி வாக்களித்தால் நாட்டில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காது. இன்றிருக்கும் பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காததற்கு காரணம் திராவிட கட்சிகளே. நாட்டின் அடிப்படை அரசியல் கட்டமைப்பை மாற்றுவதற்காகவே நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடுகின்றது.

மற்றபடி, இப்போதுள்ள ஆட்களை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாங்கள் போட்டியிடவில்லை. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை பொய் வழக்கில் கைது செய்கின்றனர் திமுகவினர். உண்மையில் மனதில் `தில்’ இருப்பவர்கள் திமுகவில் இருக்கிறார்கள் என்றால், பிஜேபியின் வேட்பாளர்கள் ஒருவர்மீது அப்படி செய்து பார்க்கட்டுமே. தைரியம் இல்லாததால் தான் என் கட்சியின் வேட்பாளர்கள் மீது அவதூறு பரப்புகின்றனர், கடத்துகின்றனர். 

இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை மிரட்டும் திமுகவினரின் இந்தச் செயலுக்கு, நாம் தமிழர் கட்சி கட்டாயமாக தனது பதிலடியை திருப்பிக் கொடுக்கும். கடந்த கால வரலாற்றை திமுக திரும்பி பார்க்க வேண்டும். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தலில், பாஜகவை எதிர்த்து நிற்க பயந்து கூட்டணி கட்சிகளுக்கு திமுக இடத்தை ஒதுக்கிக் கொடுத்துள்ளது. சொல்லப்போனால் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு காரணம் மோடி தான்.

அந்தவகையில் நியாயமாக பார்த்தால் துர்கா ஸ்டாலின் பிரதமர் மோடி படத்தை வைத்து தான் சாமி கும்பிட வேண்டும்’ என்று கூறினார். முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினை சீமான் இப்படி பேசியிருப்பது அனைவரிடமும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்களுக்கு எதிரான கருத்து தெரிவித்து இருக்கும் சீமான், விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.