Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவை மதரீதியாகப் பிரித்து துண்டாடவே பாஜக அரசின் இக்கொடுஞ்செயல் வழிவகுக்கும்- சீறும் சீமான்

கேரள மாநில அரசினைப்போல, மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கும் இக்கொடுந்திருத்தச்சட்டத்தை எக்காரணம்கொண்டும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த அனுமதிக்கக்கூடாதென தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்வதாக சீமான் கூறியுள்ளார். 

Seeman has condemned the implementation of CAA in India KAK
Author
First Published Mar 12, 2024, 10:48 AM IST

இந்திய குடியுரிமை திருத்த சட்டம்

இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தியும், ஈழத்தமிழர்களைப் புறக்கணித்தும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக பாஜக அரசு அரசிதழில் வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வேற்றுமையில் ஒற்றுமை எனும் பன்முகத்தன்மை கோட்பாட்டின் கீழ் கட்டப்பட்டுள்ள இந்தியப் பெருநாட்டை மதரீதியாகப் பிரித்து துண்டாடவே பாஜக அரசின் இக்கொடுஞ்செயல் வழிவகுக்கும்.  

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அகதியாக வந்து குடியேறிய இசுலாமியர் அல்லாதோர்க்குக் மட்டும் குடியுரிமை வழங்குவதற்கு கொண்டுவரப்பட்ட  குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை தொடக்கம் முதலே நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. 

Seeman has condemned the implementation of CAA in India KAK

இஸ்லாமியர்கள் புறக்கணிப்பு

மதப்பாகுபாட்டை மக்களிடையே ஏற்படுத்தி இசுலாமிய மக்களைத் தனிமைப்படுத்தும் உள்நோக்கம் கொண்ட அத்திருத்தச்சட்டத்தை  எதிர்த்து பல்வேறு மக்கள் திரள் போராட்டங்களையும் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்தது. 1955ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்தின்படி, இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்க அச்சட்டம் வழிவகுத்தது. அதில் திருத்தம் செய்து,

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிருத்துவர்கள் ஆகியோர் இந்நாட்டிற்கு வந்து குறைந்தது 6 ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்க தற்போது இப்புதிய அத்திருத்தச்சட்டம்  வழிதிறந்துவிடுகிறது. இசுலாமியர்களை மட்டும் திட்டமிட்டுப் புறந்தள்ளிவிட்டு மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் திருத்தச்சட்டம் மூலம் இந்நாட்டின் அடித்தளமான மதச்சார்பின்மைக் கோட்பாடே முற்றுமுழுதாக துடைத்தெறியப்படும்.  

Seeman has condemned the implementation of CAA in India KAK

வாக்கு வேட்டையாட பாஜக திட்டம்

இசுலாமிய நாடுகளிலிருந்து வெளியேறும் இசுலாமியர் அல்லாதோர்க்குக் குடியுரிமை வழங்கும் பாஜக அரசு, பெளத்த மதப்பயங்கரவாத நாடான இலங்கையிலிருந்து இன ஒதுக்கலுக்கு ஆளாக்கப்பட்டு, போரின் விளைவாக வெளியேறும் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கவும் மறுக்கிறது.  ஏறக்குறைய 30 ஆண்டுகளாக இந்நிலத்தில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் சொந்தங்கள் இன்றும் அகதிகளாகவே தொடரவே இச்சட்டம் வலியுறுத்துகிறது. ஈழச்சொந்தங்களை இப்பட்டியலில் புறக்கணித்ததன் மூலம், தமிழர்களை இந்துக்கள் எனப் பொய்யுரைத்து வாக்குவேட்டையாட முயலும் பாஜக போன்ற இந்துத்துவ இயக்கங்களுக்கு எதிராக நாங்கள் முன்வைத்த, ‘தமிழர்கள் ஒருபோதும் இந்துக்கள் அல்லர்’ எனும் முழக்கம் மெய்ப்பிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. 

Seeman has condemned the implementation of CAA in India KAK

சிஏஏ திரும்ப பெற வேண்டும்

ஆகவே, ஈழத்தமிழர்களை புறக்கணித்தும், இசுலாமிய மக்களைப் பிரித்து  தனிமைப்படுத்தி நாடற்றவர்களாக மாற்ற முனையும் குறிக்கோளோடும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமைத்  திருத்தச்சட்டத்தை, தேசிய இனங்களின் உரிமைக்கு பாடுபடும் அனைத்து மாநிலக் கட்சிகளும்  உறுதியாக எதிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நாட்டினை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் இத்திருத்தச்சட்டத்தை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக  அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

சீன் போடுவதற்காக தனக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக மோடியிடமே பொய் சொன்ன பாஜக நிர்வாகி- வெளியான பகீர் தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios