ரஜினி கர்நாடகாவிலோ, மராட்டியத்திலோ கட்சி ஆரம்பித்தால் நான் ஆதரிப்பேன் என்று நாம்  தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

 
‘அரசியலில்  தான் இறங்குவதாகவும், 2021-ல் நடக்கும் தேர்தலில் தன்னுடைய படையும் இருக்கும்’என்று கடந்த 2017-ம் ஆண்டில் ரஜின் அறிவித்தார். அப்போது முதலே ரஜினியை தீவிரமாக விமர்சித்துவருகிறார் நாம்  தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான். அண்மையில்கூட  “ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அவரை எதிர்க்க ஐ ஏம் வெயிட்டிங்” என்று சொல்லியிருந்தார். விஜய், சூர்யா, சிம்பு ஆகியோரை அரசியலுக்கு அழைப்பது பற்றியும் ரஜினியை எதிர்ப்பது பற்றியும் வார இதழ் ஒன்றில் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

 
இதற்கு பதில் அளித்துள்ள சீமான், “ ரஜினி 50 ஆண்டுகள் சினிமாவில் நடித்துவிட்டு ஓய்வுபெறுகிற காலத்தில் நான் ஆட்சிக்கு வந்து உங்களிடம் அதிகாரத்தைச் செலுத்துவேன் என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்? ஒரு நடிகராக எங்களை மகிழ்விப்பது வேறு, தலைவனாக இருந்து எங்கள் மீது அதிகாரத்தைச் செலுத்துவது வேறு. அதை எந்த தன்மானம் உள்ள தமிழராலும் ஏற்க முடியாது. ‘அவரு ரொம்ப நல்லவர்’ என்று சிலர் பேசுகிறார்கள். யார் இங்கே நல்லவர்? தன்னுடைய சொத்துக்களை விற்று அந்தக் காலத்தில் நம் மக்களுக்கு அணையைக் கட்டிகொடுத்த பென்னி குக்கை ஏன் விரட்டினீர்கள்? வெள்ளைக்காரன் என்றுதானே.
விஜய், சூர்யாவை வரவேற்கிறான் என்றால், அவர்கள் இந்தத் தமிழ் மண்ணின் மகன்கள். ரஜினி  தான் வளர்ந்த கர்நாடகவிலோ, தன் இனத்தவர்கள் வாழும் மகாராஷ்டிரத்திலோ போய் கட்சி ஆரம்பிக்கட்டும். தமிழகத்தில் பிரபலமாக இருந்தாலும் கர்நாடகாவில் நடந்த தேர்தலில்தான் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டார். அவரை நாங்கள் எதிர்த்தோமா? இப்போதும் அதே அன்புடன் இருப்பதோடு அவரை ஆதரிக்கவும் செய்தோமே?

 
அதேபோல ரஜினி கர்நாடகாவிலோ, மராட்டியத்திலோ கட்சி ஆரம்பித்தால் நான் ஆதரிப்பேன். அங்குள்ள தமிழ் மக்களையும்கூட ரஜினிக்கு வாக்கு செலுத்துங்கள் என்று கேட்பேன். அப்படி அல்லாமல் தமிழினத்தை ஆளத் துடித்தால், அதை ஏற்க முடியாது.” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.