பல்கலைக்கழகங்களை மதவெறி கூடங்களாக மாற்றிய ஆர்எஸ்எஸ்.! மனித குலத்திற்கு எதிரானவர்கள்- சீமான்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைத் தாக்கிய இந்துத்துவ அமைப்பினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தியது அதிரச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு நாம் தமிழகர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் சங்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை சேர்ந்தவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் என் அன்புத்தம்பி தமிழ் நாசர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அறிவை செதுக்கும் கலைக்கூடங்களான பல்கலைக்கழகங்களை மதவெறிக் கூடங்களாக மாற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் அத்துமீறல்கள்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை சேர்ந்த மாணவர்களின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து எல்லை மீறி வருகின்றன. கடந்த காலங்களில் வெளியிலிருந்து மதவெறி கும்பல்களைத் துணைக்கு அழைத்து வந்து படிக்கும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தச் செய்த அவ்வமைப்பினர், தற்போது தாங்களே முன்னின்று இக்கொடுந்தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். பாரதிய வித்யார்த்தி அமைப்பினரின் இத்தகைய சட்டவிரோத வன்முறைச்செயல்களை கல்வி வளாகத்திற்குள் அனுமதித்து வேடிக்கைப் பார்க்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சிறிதும் பொறுப்பற்றப்போக்கு வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் அவலம்
இந்திய ஒன்றியத்தை ஆளும் மதவாத பாஜக அரசின் அதிகார பலம், அதனை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்புலம் ஆகிய இரண்டும்தான் பாரதிய வித்யார்த்தியைச் சேரந்த மாணவர்கள் சிறிதும் அச்சமின்றிப் படிக்கும் இடத்தில் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட முதன்மையான காரணம். படிக்கும் மாணவர்களின் மனதினை சிதைத்து, மதவெறுப்பு நஞ்சினை விதைத்து, அவர்களிடையே பிரி வினையை வளர்த்து, வருங்காலத் தலைமுறையினரை உருவாக்கும் கல்வி நிலையங்களை வன்முறை கூடங்களாக மாற்றி நிறுத்தியிருக்கும் இந்துத்துவ அமைப்புகளின் செயல் இந்திய நாட்டை மிகப்பெரும் அழிவுப்பாதைக்கே அழைத்துச் செல்லும். நாட்டின் தலைநகரில் உள்ள முக்கிய பல்கலைக்கழகத்தில் மதவாதிகளின் இத்தகைய வன்முறைச் செயல்கள் உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன.
உடனடியாக கைது செய்திடுக
இக்கொடும் நிகழ்வுகள் மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மனிதகுலத்திற்கே எதிரானவர்கள் என்பது மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஆர்.எஸ்.எஸ், பாரதிய வித்யார்த்தி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் நிகழ்த்தும் மத வன்முறைகளை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைத் தாக்கிய இந்துத்துவ அமைப்பினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமெனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்