seeman criticize election commission
தேர்தல் ஆணையம் நாடக கம்பெனியைப் போல் இருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட 40707 வாக்குகள் அதிகம் பெற்று தினகரன் அபார வெற்றி பெற்றுள்ளார். பணப்பட்டுவாடா புகார் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த 21ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த முறையும் ஆளுங்கட்சியான அதிமுக தரப்பிலும் தினகரன் தரப்பிலும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதும் திமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பணநாயகம் வென்றுள்ளதாக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜனநாயகத்தை பணநாயகம் சீரழித்து கொண்டிருக்கிறது. அசிங்கம் என தெரிந்தும் ஓட்டுரிமையை பணத்திற்காக விற்கும் அளவிற்கு மக்கள் ஏழ்மையிலும் வறுமையிலும் உள்ளனர்.
பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. தேர்தல் ஆணையம் நாடக கம்பெனி போன்று செயல்படுகிறது. இளைஞர்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பணப்பட்டுவாடாவைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
