கூட்டணிக்கு வருமாறு தினகரன் தரப்பில் இருந்து அழைப்பதாக தகவல் வெளியான நிலையில் யாருடனும் கூட்டணி இல்லை என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


   நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தனது தரப்பில் பிரச்சாரத்திற்கு ஆட்கள் தேவை என்பதால் சீமானுக்கு தினகரன் தரப்பினர் தூது அனுப்பியதாக தகவல் வெளியானது. சீமானுக்கு ஒரு எம்.பி தொகுதி வழங்க தினகரன் தரப்பு முன்வந்ததாகவும் கூட கூறப்பட்டது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் தினகரன் கட்சியுடன் சீமான் கூட்டணி அமைப்பார் என்று கூட சொல்லப்பட்டது.


   இந்த நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான், நாம் தமிழர் கட்சி கொள்கைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் என்றார். தேர்தல் அரசியலுக்காக கொள்கையில் சமரசம் செய்து கொள்ளப்போவதில்லை என்று சீமான் கூறினார்.


   தங்கள் கொள்கையுடன் ஒத்துப்போகும் கட்சிகள் எதுவும் தமிழகத்தில் இல்லை என்றும் கூறிய சீமான் நாடாளுமன்ற தேர்தலை   நாம் தமிழர் கட்சி தனித்தே எதிர்கொள்ளும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். அப்போது இடைத்தேர்தல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சீமான், நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தல்களிலும் போட்டியிடும் என்றார்.