ரஜினியின் அரசியலைத் தொடர்ந்து கடுமையாகத் தாக்கிப் பேசிவரும் சீமான் பாராளுமன்றத் தேர்தலில் இருந்து அவர் ஒதுங்கியது பற்றிக் கூறும்போது ‘சட்டமன்றத் தேர்தலுக்கு மட்டும் அவர் வந்துவிடவா போகிறார்’ என்று கிண்டல் அடித்தார்.

ரஜினியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து எப்போதுமே மிகக் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து திடீரென ரஜினி ஒதுங்கியது குறித்து இன்று திருச்சியில் நிருபர்களிடம் பேசினார். 

அப்போது அவர்,’ ரஜினியிடம் இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கும் ஒரு தலைவர் அவரது ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதையும் சொல்லவேண்டும். அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு. அதை விட்டுவிட்டு யாரு நல்லவரோ யாரு தன்னீர்ப் பிரச்சினையைத்தீர்த்து வைப்பார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று பொறுப்பில்லாமல் பேசுகிறார்.

யார் நல்லவர்களென்றோ யார் தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பார்கள் என்றோ ரஜினிக்குத் தெரியாதா? அப்படி தெரியாவிட்டால் அவரெல்லாம் ஒரு தலைவரா? அடுத்த சட்டமன்றத்தேர்தலுக்கு வருவாரா என்று தெரியவில்லை. அப்படி வந்தால் அவராவது தண்ணீர்ப் பிரச்சினையை தீர்த்துவைக்கிறாரா என்று பார்ப்போம்’ என்றார் சீமான்.