ஆண்டுக்கு ரூ. 2லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 2-வது வீடு வாங்கும் போது கிடைக்கும் வரிச்சலுகையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதாக வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கையில் பணம் அதிகமாக வைத்திருப்பவர்கள், ஏற்கனவே சொந்தவீடு வைத்திருந்து 2-வதாக வீடு வாங்கும் போது, அதற்கான வரிச்சலுகை இனி கிடைக்காது. 

2-வது வீடு கட்ட கடன் பெறுவோர், அந்த கடனையும், வரிச் சலுகையையும் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரியவந்ததையடுத்து, இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

இது குறித்து மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா நிருபர்களிடம் நேற்று கூறுகையில், “ ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர், 2-வது முறையாக சொந்த வீடு கட்டுவதற்காக அரசு வருமான வரிச்சட்டம் பிரிவு 71-ன்கீழ்சலுகைகள் அளித்து வந்தது. ஆனால், அதை தவறாக சிலர் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த சலுகையை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது. முதல் முறையாக வீடு கட்டுபவர்களுக்கே அந்த வரிச்சலுகை இனி கிடைக்கும். இதற்காக கொண்டு வரப்பட்ட நிதி மசோதா-2017-ல் இதற்கான வரையறை கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசின் வளங்கள் மிக,மிகக் குறைவு. இப்போது அரசு முன்உள்ள கேள்வி, சொந்த வீட்டில் வசிக்காமல் வாடகை வீட்டில் வசிப்போர், முதல்முறையாக வீடுவாங்க, அல்லது வீடுகட்டுவதற்காக, கடன் வாங்கும் போது அவர்களுக்கு சலுகை அளிப்பதா? அல்லது கையில் பணத்தை கூடுதலாக வைத்து, 2-வது வீடு கட்டவும், அல்லது ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யவும் இருப்பவர்களுக்காக சலுகை அளிப்பதா? என்பது தான்.

உதாரணமாக என்னிடம் எனக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது. 2-வதாக நான் புதிய வீடு வாங்குவதற்காக, வங்கியில் ரூ. ஒரு கோடி கடன் பெறுகிறேன். அந்த கடனுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அசல், கடனுக்கு வட்டி செலுத்துகிறேன் என வைத்துக்கொள்ளுங்கள்.

அந்த வீட்டை வாடகைக்கு விட்டு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் எடுத்துக்கொண்டு, மீதமுள்ள ரூ. 7 லட்சத்தை எனது ஊதியத்தில் இருந்து செலுத்தி விடுகிறேன். இதில், இந்த அரசுக்கு வர வேண்டிய ரூ. 3 லட்சம் இழப்பாக அமைந்து விடுகிறது. அதனால்தான் 2-வது வீடு கட்ட சலுகை ஏன் கொடுக்க வேண்டும்? அந்த செலவை ஏன் சுமக்க வேண்டும் என அரசு கருதுகிறது'' எனத் தெரிவித்தார்.