தமிழகத்தை கொரொனா களங்கடித்து வரும் வேளையில், மதுரையை தலைநகராக்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொளுத்திபோட, அதையே மற்றொரு மதுரையைச் சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜூவும் ஆதரித்தார். ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். திருச்சியை தலைநகராக்க  விரும்பியதைப் பற்றி திருச்சியைச் சேர்ந்த பலரும் கருத்து தெரிவிக்க, இரண்டாவது தலைநகரம் திருச்சியா, மதுரையா என்ற போட்டி சமூக ஊடகங்களில் தீயாக கிளம்பியிருக்கிறது. புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி, சென்னை, திருச்சி, கோவை என்று மூன்று தலைநகரங்கள் இருக்க வேண்டும் என்று தன் பங்குக்கு தெரிவித்துள்ளார்.

மதுரை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் அறிவித்த நிலையில், திருச்சியில் அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இங்குள்ள சேவை நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இன்னொரு தலைநகரம் என்றால் அது திருச்சிதான் என்று குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் திருச்சி தலைநகர  திட்டத்தையே அன்று கடுமையாக எதிர்த்தது திமுக. ஆனால், இன்றோ அதன் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, இரண்டாவது தலைநகர் என்றால் அது திருச்சிதான் என்று அழுத்தம் திருத்தமாக கருத்து தெரிவித்துள்ளார்.


ஒரு படி மேலே போய் திருச்சியை இரண்டாவது தலைநகராக்குவோம் என்று அறிவிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு அறிவித்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகள், மதத்தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஜாதிச் சங்கங்கள், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து போராட்டம் குழு அமைக்கப்படும் என்ற அளவுக்கு திருச்சியில் நிலவரம் சூடாகியிருக்கிறது. இவ்வளவுக்கும் பிறகு திருச்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று இரு அமைச்சர்களையும் திருச்சியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் விமர்சிக்க தொடங்கியிருக்கிறார்கள்.


மேலும் மதுரை, திருச்சியில் உள்ள சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டு வாத விவாதங்களும் ஜரூராக தொடங்கியிருக்கின்றன. கொரோனாவிலிருந்து எப்போது மீள்வோம் என்று தெரியாத நிலையில் மக்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் இரண்டாவது தலைநகர பஞ்சாயத்து வேறு தீயாக பரவத் தொடங்கியிருக்கிறது.