தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிவந்த தகவல்கள் முற்றிலுமாக தவறானது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தகவல் வெளியானது. இந்த செய்தி பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி சார்பில் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறப்புக்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும் பெற்றோர்களிடம் கருத்து கேட்டு சூழ்நிலைக்கு ஏற்பவே முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். 

மேலும், பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுவது குறித்து முதல்வர் அறிவிப்பார். தற்போது ஊரடங்கு உள்ள நிலையில் அதை எப்படி செயல்படுத்தலாம் என்பதைப் பற்றி முதல்வர் தான் தீர்மானிப்பார் என்றார்.